பிரதமரை கேள்வி கேட்க எனக்கு உரிமை உண்டு நடிகர் பிரகாஷ்ராஜ் பேட்டி
எழுத்தாளர் கௌரி லங்கேஷ் படுகொலை உள்பட மனதில் தோன்றும் விஷயங்களை பொதுத்தளத்தில் தொடர்ந்து பேசிக்கொண்டிருப்பேன் என்று திரைக்கலைஞர் பிரகாஷ்ராஜ் கூறியிருக்கிறார்.ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் பிரதமர் என்பவர் பல கோடி பேரின் வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பவர். தாம் ஒரு குடிமகன் என்ற நிலையிலும் திரைக்கலைஞர் என்ற நிலையிலும் தொடர்ந்து பிரதமரின் செயல்பாடுகளை ஏற்பதும் ஏற்காததும் தமது உரிமை என்றும் அவரை தொடர்ந்து கேள்வி கேட்க தமக்கு உரிமை உண்டு என்றும் கூறினார். மோடி ஒரு கட்சியின் பிரதிநிதியாக இருக்கமுடியாது.
அவர் மதச்சார் பற்ற நாட்டின் பிரதிநிதி. சில பிரச்சனைகளில் தமக்கு கருத்து வேறுபாடுகள் ஏற்படும்போது நேர்மையாகவும் ஜனநாயக ரீதியாகவும் கருத்துக் களை சொல்லும் போது அதற்கு அதிக விலைகொடுக்கவேண்டியுள்ளது.பிரதமர் மோடியை சமூக வலைத்தளத்தில் பின்தொடருபவர்கள் எழுத்தாளர் கௌரி லங்கேஷ் படுகொலையை கொண்டாடினார்கள். எனவே நான் அந்த நபர்களுக்கும் எதிரானவன்தான். இந்த ஜனநாயக நாட்டில் பொறுப்புள்ள குடிமகன் என்ற முறையில் இந்த விஷயத்தில் பிரதமர் மவுனமாக இருப்பது எனது மனதை பெரிதும் பாதித்துள்ளது. அப்படி கூறுவது ஒரு பாவமா? என்றும் பிரகாஷ்ராஜ் கேட்டுள்ளார்.சமூக வலைத்தளங்களில் தமக்கு எதிராக கருத்துக்களை பதிவிடுவோரை தாம் ஒருபோதும் பிளாக் செய்யப்போவதில்லை என்றும் ஜனநாயகத்தில் எவர் ஒருவரும் சுதந்திரமாக கருத்துக்களை தெரிவிக்கலாம் என்றும் கூறினார்.
வாலிபர் சங்கம் கண்டனம்
பிரகாஷ்ராஜ் மீது அவதூறு வழக்குப் பதிவு செய்துள்ளதை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக்குழு வன்மையாக கண்டித்துள்ளது.இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் எம்.செந்தில் மற்றும் மாநிலச் செயலாளர் எஸ்.பாலா ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில் அண்மையில் வாலிபர் சங்க கர்நாடக மாநில மாநாட்டில் பிரதமர் மோடி குறித்து பிரகாஷ்ராஜ் தெரிவித்த கருத்துக்களை பொறுத்துக் கொள்ள முடியாத சங்பரிவாரத்தை சேர்ந்த வழக்குரைஞர் சர்தார் பர்விந்தர் சிங் உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் அவதூறு வழக்கு தொடுத்துள்ளார்.பாஜக அரசு ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. 2 கோடி இளைஞர்களுக்கு வேலை, விவசாய பொருட்களுக்கு கட்டுப்படியான விலை, கறுப்புப் பணம் ஒழிப்பு என பாஜக மக்களுக்கு கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. அனைத்துத் துறையிலும் மோடி தலைமையிலான மத்திய அரசு படுதோல்வி அடைந்துள் ளது.
இதை சரிசெய்வதற்கு மாறாக, நாட்டில் கருத்து சொல்பவர்கள் மீது அவதூறு வழக்குப் போடுவது துவங்கி, கொலை செய்வது வரை தங்களது வேலையாகக் கொண் டுள்ள இம்மாதிரியான செயல்களை பன்முகத்தன்மை கொண்ட இந்திய சமூகம் ஒருபோதும் ஏற்று கொள்ளாது.மாற்றுக் கருத்தை, மாற்று சிந்தனையை புரிந்து கொண்டு நடக்கும் அரசுதான் மக்களுக்கான அரசாக இருக்க முடியும். இந்தியா ஒரு மதச்சார்பற்ற ஜனநாயக நாடு. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை விமர்சனம் செய்ய அனைவருக்கும் உரிமை உண்டு. ஆகையால் பிரகாஷ்ராஜ் மீது போடப்பட்ட அவதூறு வழக்கை திரும்பப்பெற வேண்டும். கௌரி லங்கேஷை கொலை செய்தவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும். கருத்து சுதந்திரத்தை, ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.