94 வயதில் சௌகார் ஜானகி காலமானார்...எம்.எஸ்.பாஸ்கர் உருக்கம்!

400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து தனக்கென தனி இடத்தைப் பிடித்த அவரது மறைவு திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Hero Image

சென்னை : தமிழ் திரையுலகின் மூத்த மற்றும் புகழ்பெற்ற பழம்பெரும் நடிகையான சௌகார் ஜானகி (94) காலமானார். அவரது மறைவு தமிழ்த் திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 1950 ஆம் ஆண்டு வெளியான என்.டி.ராமாராவ் அவர்களின் தெலுங்குத் திரைப்படமான 'சவுகாரு' மூலம் கதாநாயகியாகத் திரையுலகில் காலடி எடுத்து வைத்த அவர், தனது தனித்துவமான நடிப்பால் குறுகிய காலத்திலேயே மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல தென்னிந்திய மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துச் சாதனை படைத்துள்ளார். எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து 'இரு கோடுகள்', 'உயர்ந்த மனிதன்', 'பாமா விஜயம்', 'எதிர்நீச்சல்' உள்ளிட்ட பல பொற்காலத் திரைப்படங்களில் இவர் வழங்கிய பங்களிப்பு என்றென்றும் நினைவுகூரத்தக்கது.

மேலும், தனது முதுமைக் காலத்திலும் கலை மீது கொண்ட பற்றின் காரணமாகச் சந்தானம் நடிப்பில் வெளியான 'பிஸ்கோத்' போன்ற நவீன திரைப்படங்களிலும் நடித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். பாராட்டி, மத்திய அரசு கடந்த 2022 ஆம் ஆண்டு இவருக்கு நாட்டின் உயரிய விருதான 'பத்மஸ்ரீ" விருதை வழங்கிச் கவுரவித்தது.

மறைந்த சௌகார் ஜானகியின் உடல் பொதுமக்களும் திரைப்பிரபலங்களும் அஞ்சலி செலுத்துவதற்காகச் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. பலரும் நேரில் சென்று தங்களது இறுதி மரியாதையைச் செலுத்தி வருகின்றனர்.

அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய பின் நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியபோது தனது நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் கூறுகையில், "இதுவொரு நிறைவான வாழ்க்கை. திரையுலகில் அவரை 'சௌகாரம்மா' என்று மிகுந்த மரியாதையுடன் அழைப்பார்கள். நான் முதன்முதலில் அவரை 'தங்கத்துரை' என்ற படத்தின் படப்பிடிப்பின் போதுதான் எனது குடும்பத்தினருடன் நேரில் பார்த்தேன். பல மொழிகளில் சரளமாகப் பேசக்கூடிய மிகத் திறமையான நடிகை அவர். தனது 94 வயது வரை மிகவும் சுறுசுறுப்பாகவும் ஆக்டிவாகவும் வாழ்ந்தார் என்பதை அறியும்போது வியப்பாக இருக்கிறது. நாமெல்லாம் அவருடைய மிகப்பெரிய ரசிகர்களாக இருந்துள்ளோம். 'புதுப் பிறவி' படத்தில் இடம்பெற்ற அந்தப் பாடலை ரசிக்காதவர்களும் இருக்க முடியாது. அம்மா அவர்களின் ஆன்மா இறைவன் இடத்தில் இளைப்பாற வேண்டும் எனப் பிரார்த்திக்கிறோம்" என்று வருத்தத்துடன் தெரிவித்தார்.

94 வயதில் சௌகார் ஜானகி காலமானார்...எம்.எஸ்.பாஸ்கர் உருக்கம்!