அர்ஜென்டினா:2026 உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியில் ஸ்பெயின் அணியிடம் தோல்வியடைந்த அர்ஜென்டினா அணிக்கு, தற்போது ஃபீபா (FIFA) மாபெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. இறுதிப்போட்டி முடிந்த பிறகு மைதானத்தில் நடந்த மோதல்களுக்காக, அர்ஜென்டினா வீரர்கள் மற்றும் அர்ஜென்டினா கால்பந்து சங்கத்தின் (AFA) மீது கடுமையான தடைகள் மற்றும் அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளன.
லியாண்ட்ரோ பரேடஸுக்கு 10 போட்டிகள் தடை
உலகக்கோப்பை இறுதிப்போட்டி முடிந்த பிறகு, ஸ்பெயின் வீரர்களுக்கும் அர்ஜென்டினா வீரர்களுக்கும் இடையே மைதானத்தில் பெரிய அளவிலான கைகலப்பு ஏற்பட்டது. இதில் ஸ்பெயின் வீரர்களான எரிக் கார்சியா மற்றும் காவி ஆகியோரைத் தாக்கியதற்காக, அர்ஜென்டினாவின் நட்சத்திர வீரர் லியாண்ட்ரோ பரேடஸுக்கு (Leandro Paredes) சர்வதேச போட்டிகளில் விளையாட 10 போட்டிகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த அதிரடி தடையின் மூலம் அவர் கிட்டத்தட்ட ஒரு வருட காலத்திற்கு அர்ஜென்டினா அணிக்காக விளையாட முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. மேலும் அவருக்கு 90 ஆயிரம் டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 75 லட்சம்) அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
சிக்கலில் மாட்டிய மற்ற வீரர்கள்
பரேடஸ் மட்டுமில்லாமல் ஸ்பெயின் வீரர் ரோட்ரியைத் தாக்கிய நஹூயல் மோலினாவுக்கு (Nahuel Molina) 7 போட்டிகள் தடையுடன் 90 ஆயிரம் டாலர்கள் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. மற்றொரு வீரரான தியாகோ அல்மாடாவுக்கு ஒரு போட்டி தடையுடன் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
வீரர்களைத் தாண்டி, அர்ஜென்டினா அணியின் உதவிப் பயிற்சியாளரான ராபர்டோ அயலாவும் இந்த மோதலில் ஈடுபட்டதால் அவருக்கு 3 போட்டிகள் தடை விதிக்கப்பட்டுள்ளது கால்பந்து வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அர்ஜென்டினா கால்பந்து சங்கத்திற்கு மெகா அபராதம்
மைதானத்தில் நடந்த மோதல் மட்டுமின்றி, இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியின் போது அர்ஜென்டினா ரசிகர்கள் பாடிய சர்ச்சை முழக்கங்கள் மற்றும் அரசியல் பதாகைகளுக்காக அர்ஜென்டினா கால்பந்து சங்கத்திற்கு (AFA) 3 லட்சத்து 21 ஆயிரம் டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 2.66 கோடி) மெகா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், அடுத்த இரண்டு உள்ளூர் போட்டிகளில் 50 சதவீத ரசிகர்களை மட்டுமே மைதானத்தில் அனுமதிக்க வேண்டும் என்ற கடுமையான கட்டுப்பாட்டையும் ஃபீபா விதித்துள்ளது. இந்த அதிரடித் தீர்ப்புகளால் அர்ஜென்டினா அணிக்கு எதிராக ஃபீபா செயல்படுவதாக அந்நாட்டு ரசிகர்கள் இணையத்தில் கொந்தளித்து வருகின்றனர்.
