சென்னை : ஜீ தமிழ் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் "கெட்டி மேளம்" சீரியலில், கதாநாயகனாக 'வெற்றி' என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகர் ஸ்ரீ. இந்த சீரியலின் சமீபத்தில் எபிசோடில், இவர் 'கருப்புசாமி' கெட்டப்பில் தோன்றி அருள்வாக்கு கூறுவது போன்ற ஒரு முக்கியக் காட்சி இடம்பெற்றிருந்தது.
இந்த எபிசோட் ஒளிபரப்பானதைத் தொடர்ந்து, ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர் எப்படி இந்த வேடத்தில் நடிக்கலாம் என்று கேள்வி எழுப்பியிருந்தார். அது மட்டுமன்றி பலரும் இது மற்றொரு திரைப்படத்தின் காப்பி என்றும் சமூக வலைதளங்களில் சிலர் கடுமையான விமர்சனங்களையும் பரப்பத் தொடங்கினர். இந்த விவகாரம் இணையத்தில் பெரிய விவாதமாக மாறிய நிலையில், தன் மீதான விமர்சனங்களுக்கு நடிகர் ஸ்ரீ மிகவும் ஆவேசமாகவும் உருக்கமாகவும் பதிலடி கொடுத்துள்ளார்.
தான் ஒரு நடிகன் என்றும், தனக்குக் கிடைக்கும் கதாபாத்திரங்களில் நேர்மையாக நடிப்பது மட்டுமே தனது தொழில் என்றும் குறிப்பிட்டுள்ள அவர், தான் இயேசுவை மிகவும் ஆழமாக நம்புவது உண்மைதான் என்றாலும், ஒரு கலைஞனாகப் பல்வேறு கதாபாத்திரங்களை ஏற்பது தனது வேலை என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
இயேசுவின் வாழ்க்கையைத் திரைப்படமாக எடுத்தால் கூட அங்கு இயேசுவாக நடிக்க ஒரு நடிகரும், யூதா கதாபாத்திரத்தில் நடிக்க மற்றொரு நடிகரும் தேவைப்படுவார்கள் என்பதை நினைவூட்டிய ஸ்ரீ, தான் மதத்தின் பெயரால் மக்களிடம் காணிக்கை வாங்கி ஏமாற்றுபவன் அல்ல என்றும், நேர்மையாக உழைத்துச் சம்பாதிப்பவன் என்றும் தெரிவித்துள்ளார். வேலையில் நல்ல வேலை, கெட்ட வேலை என்று எதுவும் இல்லை என்றும், தான் செய்வது சரியா, தவறா என்பதைத் தீர்மானிக்க வேண்டியது இயேசு மட்டும்தான் என்றும் அவர் அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார்.
மேலும், 'கருப்பு' என்ற திரைப்படத்தைப் பார்த்துவிட்டு இந்தக் கதாபாத்திரத்தை அப்படியே காப்பி அடித்துவிட்டீர்கள் என்று கூறுபவர்களுக்குப் பதிலளித்த அவர், ஒரு படைப்பைப் பார்த்துவிட்டு அதிலிருந்து உத்வேகம் பெற்று காப்பி அடித்தால் அதில் என்ன தவறு இருக்கிறது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
பொதுவாகவே சமூகத்தில் சீரியல் மற்றும் அதில் நடிப்பவர்களை மிகவும் கீழ்த்தரமாகப் பார்க்கும் ஒரு போக்கு நிலவி வருவதைச் சாடிய அவர், சீரியலிலும் மிகச் சிறந்த திறமையான நடிகர்கள் இருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். ஒரு சீரியலை நம்பி நூற்றுக்கணக்கான தொழிலாளர்களின் உழைப்பும், பல குடும்பங்களின் வாழ்வாதாரமும் அடங்கியிருக்கிறது என்று அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
சினிமா, சீரியல், மேடை நாடகம், தெருக்கூத்து என்று எந்த வேறுபாடும் இல்லாமல், எல்லாரும் இந்த ஒரு ஜாண் வயிற்றுக்காகத்தான் உழைத்துக் கொண்டிருக்கிறோம் என்று தன் குமுறலை வெளிப்படுத்திய ஸ்ரீ, பார்ப்பவர்களுக்கு இது வெறும் பொழுதுபோக்காக இருக்கலாம், ஆனால் தங்களைப் போன்ற கலைஞர்களுக்கு இதுதான் சோறு போடுகிறது என்பதைப் புரிந்துகொண்டு, தயவுசெய்து சமூக வலைதளங்களில் வன்மத்தைக் கக்காதீர்கள் என்று தனது விளக்கத்தை முடித்துள்ளார்.
