சென்னை : ஜனநாயகன் திரைப்படத்தில் நடித்ததைத் தவிர ஜனநாயகத்தின் அடிப்படை கூடத் தெரியாத அரசாக இந்த அரசு செயல்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ள திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, காவிரி விவகாரத்தில் அரசின் தவறுகளைச் சுட்டிக்காட்டி பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக கூறி வன்மையாகக் கண்டித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், சர்வாதிகாரத்தின் உச்சத்தில் நின்று கொண்டு இந்த அரசு இதுபோன்ற செயல்களைச் செய்து வருவதாகவும், நாளை சட்டமன்றக் கூட்டம் கூடவுள்ள நிலையில் எதிர்க்கட்சித் தலைவரைக் கைது செய்வது அத்தகைய ஜனநாயக விரோதச் செயல் என்றும் குற்றம்சாட்டியுள்ளார். இந்திய ஜனநாயக வரலாற்றில் கொலைக் குற்றவாளிகளுக்கே கூட சட்டமன்றக் கூட்டத்தில் கலந்துகொள்ள அனுமதி கோரி நீதிமன்றம் மூலம் அனுமதி வழங்கப்பட்டிருக்கும்போது, காவிரி விவகாரம் குறித்து டெல்டா மக்களின் பிரச்சினைகளை முன்வைத்து நாற்பது நிமிடங்கள் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவரைக் கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது என்றார்.
தற்போதைய அரசியல் சூழலில், கூட்டத்தில் கூட்ட நெரிசலில் யாரோ ஒருவர் எழுப்பிய கேள்விக்குத் தற்காப்பாகப் பதிலளித்ததை வைத்து இவ்வளவு அவசரமாக வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை எடுப்பதன் பின்னணியில் அரசியல் காழ்ப்புணர்ச்சி இருப்பதாகவும், ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்காலங்களிலேயே இதுபோன்ற வழக்குகளில் எவரும் உடனடியாகக் கைது செய்யப்பட்டதில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
விவசாயிகளின் பசி பட்டினியைக் கவனிப்பதில் அக்கறை காட்டாத இந்த அரசாங்கம், இதுபோன்ற அவதூறு வழக்குகளின் மூலம் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை மேலும் ஓர் இளைய தலைவராக உருவெடுக்கச் செய்துள்ளது என்றும் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். திரிஷா என்ன பிரதமரா? முதல்வரா? திரிஷாவை விமர்சித்தால் கைது செய்வார்களா?
மக்கள் பிரச்சினையை கவனிப்பதில் தவெக அரசுக்கு நேரமில்லை. எதிர்க்கட்சியினரை கைது செய்ய முனைப்பு காட்டுகிறது" எனவும் காட்டத்துடன் தெரிவித்துள்ளார்.
