கைதி 2 எப்போது ஸ்டார்ட்? எஸ்.ஆர். பிரபு சொன்ன முக்கிய தகவல்!
கைதி 2 படத்திற்கான படப்பிடிப்பு இந்த ஆண்டு டிசம்பர் முதல் தொடங்கும் என தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு தெரிவித்துள்ளார்.

சென்னை : கைதி திரைப்படத்தின் முதல் பாகம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து அதனுடைய அடுத்த பாகத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருந்தது. ஒரு படத்தில் பாடல் கூட இல்லாமலும் ஒரே இரவில் நடக்கும் காட்சிகளை வைத்து இவ்வளவு பெரிய ஹிட் படம் கொடுக்க முடியுமா? என லோகேஷ் கனகராஜ் மற்ற இயக்குனர்களை யோசிக்க வைத்தார் என்று சொல்லலாம்.
முதல் பாகம் 2019-ஆம் ஆண்டு வெளியாகியிருந்த நிலையில், அடுத்த பாகம் எப்போது எடுக்கப்பட்டு எப்போது வெளியாகும் என ரசிகர்கள் காத்துகொண்டு இருக்கிறார்கள். பல மேடைகளில் கூலி படம் முடிந்த பிறகு தான் கைதி 2 படத்தினை தான் எடுக்கப்போவதாகவும், கண்டிப்பாக கைதி 2 திரைப்படம் வரும் எனவும் படத்தின் இயக்குநர் லோகேஷ் உறுதிப்படுத்தியிருந்தார்.
இருப்பினும் தயாரிப்பு நிறுவனம் சார்பில் இருந்து கைதி 2 குறித்து அறிவிக்காமல் இருந்தது. இந்த சூழலில், கைதி படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டபோது கைதி 2 படத்திற்கான படப்பிடிப்பானது இந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் தொடங்கும் என முக்கிய தகவலை தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து பேசிய அவர் ” இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கைதி 2 படத்திற்கான வேலைகளை தொடங்கிவிட்டார். இதனை பற்றி என்னிடமும் பேசியிருந்தார். எனவே, கைதி 2 படத்திற்கான படப்பிடிப்பு இந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் தொடங்கும். இப்போது கார்த்தி டாணாக்காரன் இயக்குனர் தமிழ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். இந்த படத்தில் நடித்து முடித்த பிறகு கைதி 2 படத்தில் நடிப்பார்” எனவும் எஸ்.ஆர்.பிரபு கூறியுள்ளார்.