இது தான் பிறந்தநாள் ஸ்பெஷல்! நார்வே செஸ் தொடரில் குகேஷுக்கு முதல் வெற்றி!
உலக சாம்பியன் டி.குகேஷ் நார்வே செஸ் போட்டியில் மூன்றாவது சுற்றில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தார்

நோர்வேயில் : நார்வே செஸ் போட்டியில் இந்தியாவின் உலக சாம்பியன் டி. குகேஷ் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்து அசத்தியுள்ளார். மூன்றாவது சுற்றில் நடந்த இந்தப் போட்டியில், அவர் அமெரிக்காவைச் சேர்ந்த புகழ்பெற்ற வீரர் ஹிகரு நகமுராவை வீழ்த்தினார். இந்த வெற்றி குகேஷுக்கு மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது, ஏனெனில் இது அவரது பிறந்தநாளில் நிகழ்ந்த ஒரு சிறப்பான தருணமாக அமைந்தது.
போட்டி குறித்து
நார்வே கிளாசிக்கல் செஸ் போட்டி அந்நாட்டில் உள்ள ஸ்டாவஞ்சர் நகரில் தற்போது நடைபெற்று வருகிறது. 6 வீரர்கள் கலந்து கொண்டுள்ள இந்தத் தொடரின் மூன்றாவது சுற்று ஆட்டத்தில் அமெரிக்காவின் ஹிகாரு நகமுராவை இந்தியாவின் குகேஷ் எதிர்கொண்டார். ஆட்டத்தின் 42வது நகர்த்தலில் குகேஷ் வெற்றி பெற்றார். இதன்மூலம் உலக சாம்பியனான குகேஷ் 3 புள்ளிகள் பெற்றுள்ளார்.
தனது 19-வது பிறந்த நாளான இன்று குகேஷ் வெற்றிப் பாதைக்குத் திரும்பியுள்ளார். ஹிகரு நகமுரா, உலக செஸ் அரங்கில் மிகவும் திறமையான வீரர்களில் ஒருவராக அறியப்படுபவர். அவரை எதிர்கொண்டு வெற்றி பெற்றது, குகேஷின் திறமை மற்றும் மன உறுதியை எடுத்துக்காட்டுகிறது.எனவே, குகேஷிற்கு அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு வாழ்த்துக்கள் குவிந்து வருவதோடு இதற்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
நார்வே செஸ் போட்டி உலகின் மிக உயரிய செஸ் போட்டிகளில் ஒன்றாகும். இதில் உலகின் தலைசிறந்த வீரர்கள் பங்கேற்பது வழக்கம். இந்த முறை, குகேஷ் இந்தியாவின் பெருமையை உயர்த்தியுள்ளார். மூன்றாவது சுற்று வரை அவர் முதல் வெற்றியைப் பெறவில்லை என்றாலும், இந்த வெற்றி அவருக்கு புதிய உத்வேகத்தை அளித்துள்ளது.