மக்கா :விமானத்தைத் தவறவிட்ட நபரை மீண்டும் விமானமே அழைத்து சென்ற அதிசிய சம்பவம் ஒன்று நடந்துள்ளது. லிபியாவைச் சேர்ந்த அமீர் அல் மஹ்தி என்ற இளைஞர், இஸ்லாமின் முக்கியமான கடமைகளில் ஒன்றான ஹஜ் பயணத்தை மேற்கொள்ள மக்காவிற்கு செல்ல தயாரானார். இவரது பயணம் லிபிய அரசாங்கத்தின் மானியத் திட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், சப்ஹா விமான நிலையத்தில், அவரது பாஸ்போர்ட்டில் உள்ள “அல் மஹ்தி” என்ற பெயர் பாதுகாப்பு சோதனைகளில் தாமதத்தை ஏற்படுத்தியது.
இதனால், அமீர் விமானத்தை தவறவிட்டார். ஏமாற்றத்துடன் விமான நிலையத்தில் காத்திருந்த அமீர், தனது ஹஜ் கனவு நிறைவேறாமல் போய்விடுமோ என்று அஞ்சினார். ஆனால், அவர் விடாமல் நம்பிக்கையுடன் அங்கேயே தங்கினார். ஆச்சரியமாக, விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மீண்டும் சப்ஹா விமான நிலையத்திற்கு திரும்பியது.
ஆனால், நீங்கள் இப்போது பயணம் செய்யமுடியாது என்பது போல அமீருக்கு அதிகாரிகள் விமானத்தில் பயணிக்க தடை விதித்ததார்கள். இதனால் மீண்டும் வருத்தத்துடன் அமீர் காத்திருந்தார். அவரை விட்டுவிட்டு விமானம் சென்ற நிலையில், விமானம் இரண்டாவது முறையாகவும் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக திரும்பி வந்தது.
இந்த முறை, விமானி மற்றும் விமான நிலைய அதிகாரிகள், அமீரின் உறுதியையும், இந்த அசாதாரண சம்பவங்களையும் கருத்தில் கொண்டு, அவரை விமானத்தில் ஏற அனுமதித்தனர். விமானி, “அமீர் இல்லாமல் இந்த விமானம் மீண்டும் புறப்படாது,” என்று கூறியதாகவும், இது அமீருக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் அளித்தது. விமானத்தில் ஏறியபோது, மற்ற பயணிகள் அவரை உற்சாகத்துடன் வரவேற்று கைதட்டினர்.
ஜித்தாவின் கிங் அப்துல்அஜிஸ் பன்னாட்டு விமான நிலையத்தில் அமீர் இறங்கியபோது, லிபிய ஹஜ் பயணத் தலைவர் மற்றும் தூதரக அதிகாரிகளால் மகிழ்ச்சியுடன் வரவேற்கப்பட்டார். இது தொடர்பான வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
unknown node