கொச்சி :சொகுசு வாகன கடத்தல் வழக்கில் மலையாள நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன் தேவாரத்திலும், துல்கர் சல்மான் பனம்பிள்ளி நகரில் உள்ள வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது.
சொகுசு கார் வரி ஏய்ப்புக்கு எதிரான ஒரு பெரிய நடவடிக்கையாக, வருவாய் புலனாய்வு மற்றும் சுங்க இயக்குநரகத்துடன் இணைந்து நாடு தழுவிய நடவடிக்கையைத் தொடங்கியுள்ளனர். திருவனந்தபுரம், எர்ணாகுளம், கோட்டயம், கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் 30 இடங்களில் உயர்மட்ட ஆய்வுகள் நடந்து வருகின்றன.
அதாவது, ‘ஆபரேஷன் நும்க்கூர்’ என்ற திட்டத்தின் கீழ், பூடானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு, வரியைத் தவிர்க்க பழைய வாகனங்களாக பதிவு செய்வதாகவும் இந்த விசாரணையில் சில திரை நட்சத்திரங்கள் பெயர்கள் இருக்கும் நிலையில், குறிப்பாக துல்கர் சல்மான், பிருத்விராஜ் உள்ளிட்டோர் வீடுகளில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
பூட்டானில் இருந்து உயர் ரக வாகனங்கள் தேவையான வரியை செலுத்தாமல் இரண்டாம் நிலை வாகனங்களாக இறக்குமதி செய்யப்படுவதாக வந்த புகாரைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
அதன்படி, முறையான வரி செலுத்தாமல் வெளிநாட்டு சொகுசு கார்களை இந்தியாவுக்குள் கொண்டு வந்து அதனை விற்பனை செய்தது தொடர்பாக சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், நடிகர்கள் பிருத்விராஜ், துல்கர் சல்மானுக்கு சொந்தமான கார்களை பறிமுதல் செய்ய உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
