VijayDevarakonda: சம்பளத்தில் இருந்து ரூ.1 கோடி! 100 குடும்பங்களுக்கு வழங்குவேன் – தேவரகொண்டா அறிவிப்பு!

நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் சமீபத்தில் வெளியான 'குஷி' படத்தின் வெற்றியில் மூழ்கி இருக்கிறார். ஐந்தாண்டுகளுக்குப் பிறகு இது அவரது முதல் வெற்றியாகும்,

Vijay Devarakonda

நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘குஷி’ படத்தின் வெற்றியில் மூழ்கி இருக்கிறார். ஐந்தாண்டுகளுக்குப் பிறகு இது அவரது முதல் வெற்றியாகும், இந்த வெற்றியை கொண்டாடும் வகையில், அவர் தனது ரசிகர்களுக்கு ஒரு சூப்பர் அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்.

விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா நடிப்பில் முழு காதல் திரைப்படமாக உருவாகியுள்ள ‘குஷி’ படம் கடந்த செப்டம்பர் 1ம் தேதி வெளியாகி உலகளவில் ரூ.70 கோடிக்கும் மேல் வசூல்  செய்து நல்ல வரவேற்பைப்பெற்றது. இந்நிலையில், நேற்றைய தினம் விசாகப்பட்டினத்தில் நடந்த குஷி படத்தின் வெற்றி விழாவில் நடிகர் விஜய் தேவரகொண்டா, படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டு, படத்தின் அனுபவத்தை குறித்து பகிர்ந்து கொண்டனர்.

அப்போது, பேசிய விஜய் தேவரகொண்டா, தனது சம்பளத்தில் இருந்து 100 ஏழை குடும்பங்களுக்கு 1 கோடி ரூபாயை நன்கொடையாக வழங்குவதாக தெரிவித்தார். அதாவது, 100 குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி செய்வதாக கூறினார்.

இது குறித்து அவர் பேசுகையில், “நான் சந்தோஷமா இருக்கேன், நான் எதையாவது செய்ய யோசிக்கிறேன், அது சரியா தவறா என்று தெரியவில்லை. எனது ‘குஷி’திரைப்பட சம்பளத்தில் இருந்து ரூ.1 கோடியை 100 குடும்பங்களுக்கு வழங்குகிறேன். தேவைப்படும் 100 குடும்பங்களைத் தேர்ந்தெடுத்து, அடுத்த 10 நாட்களில் தலா ரூ.1 லட்சம் காசோலையாக வழங்குவேன்” என்றார்.

unknown node