சென்னை:தமிழ் சினிமாவின் இளம் நட்சத்திரம் பிரதீப் ரங்கநாதன், தனது முதல் 3 திரைப்படங்களில் 100 கோடி வசூல் என்ற அசைக்க முடியாத சாதனையைப் படைத்துள்ளார். இது ஹாட்-ட்ரிக் பிளாக்பஸ்டர்கள் என்று அழைக்கப்படும் வெற்றி, அதே சமயம் இந்த வெற்றி தமிழ் சினிமாவின் புதிய தலைமுறை ஹீரோக்களுக்கும் ஒரு முன்மாதிரியாக மாறியுள்ளது. இதுவரை வேறு எந்த அறிமுக ஹீரோவும் தனது முதல் 3 படங்களில் இந்த அளவு வசூலை அடையவில்லை. பிரதீப் ரங்கநாதனின் நகைச்சுவை, இயக்கத் திறன் மற்றும் இளம் ரசிகர்களை ஈர்க்கும் பாணி, இந்த வெற்றியின் ரகசியம். இந்த சாதனை, அவரது எதிர்கால படங்களுக்கு புதிய உத்வேகத்தை அளிக்கிறது.
பிரதீப் ரங்கநாதனின் முதல் படம் ‘லவ் டுடே’ (2022), அவர் இயக்கியதுமானது. இதில் ஹீரோவாகவும், அறிமுகமானார். காதல்-காமெடி ஜானரில் உருவான இப்படம், இளைஞர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. படத்தின் டயலாக்கள், நகைச்சுவை காட்சிகள் ரசிகர்களை கவர்ந்தன. வெளியான முதல் வாரத்தில் ரூ.50 கோடி வசூல் செய்த ‘லவ் டுடே’, மொத்தம் 100 கோடி வசூலை தாண்டியது.
அதற்கு அடுத்ததாக அவர் நடிப்பில் டிராகன் திரைப்படம் வெளியானது.வெளியான உடனேயே பாக்ஸ் ஆபிஸ் வசூல் வேட்டையாடியது. முதல் வாரத்தில் ரூ.40 கோடி வசூல் செய்த டிராகன் மொத்தம் 100 கோடி வசூலை எளிதாக தாண்டியது. பிரதீப்பின் டைமிங், காட்சிகள் ரசிகர்களை சிரிக்க வைத்தன. இந்த வெற்றி, அவரை இளம் ஹீரோக்களின் வரிசையில் இணைத்தது.
இந்த படங்களின் வெற்றியை தொடர்ந்து தற்போது வெளியான ‘டியூட்’ படம், பிரதீப் ரங்கநாதனின் மூன்றாவது படமாக 100 கோடி வசூலை தொட்டுள்ளது. இயக்குநர் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் உருவாக்கிய இந்த காதல்-காமெடி படம், மமிதா பைஜுவுடன் பிரதீப்பின் ஜோடி ரசிகர்களை கவர்ந்தது. வெளியான முதல் 5 நாட்களில் ரூ.95 கோடி வசூல் செய்த படம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என 5 மொழிகளில் வெற்றி பெற்றது. படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதன் காரணமாக வரும் நாட்களில் இன்னுமே வசூல் அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
