சிக்கலின் உச்சத்தில் ஜனநாயகன்.. சென்சார் போர்டு வைத்த வாதங்கள்!

வழக்குத் தாக்கல் செய்யப்படாமல் இருந்திருந்தால் படம் மறு ஆய்வு செய்யப்பட்டிருக்கும் என வழக்கு தொடர்பான விசாரணையில் தணிக்கை வாரியம் தெரிவித்துள்ளது.

jana nayagan issue censor

சென்னை :நடிகர் விஜய் நடிப்பில் உருவான ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் (CBFC) U/A சான்றிதழ் வழங்குவதில் ஏற்பட்ட தாமதத்தால் பெரும் சர்ச்சை எழுந்தது. படக்குழு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. தனி நீதிபதி பி.டி. ஆஷா, படக்குழு அனைத்து திருத்தங்களையும் செய்து முடித்துள்ளதால் உடனடியாக U/A சான்றிதழ் வழங்குமாறு தணிக்கை வாரியத்திற்கு உத்தரவிட்டார்.இந்த உத்தரவுக்கு எதிராக தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்தது.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீவத்ஸா தலைமையிலான அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து வழக்கை ஒத்திவைத்தது. இதனால் படத்தின் வெளியீடு மீண்டும் தடைபட்டது.இந்த இடைக்காலத் தடையை எதிர்த்து படத் தயாரிப்பு நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. உச்சநீதிமன்றம் இந்த மனுவை ஜனவரி 15ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. இதனால் படத்தின் வெளியீடு தொடர்பான இறுதி முடிவு உச்சநீதிமன்ற தீர்ப்பைப் பொறுத்தே அமையும்.

இன்று (ஜனவரி 20) சென்னை உயர்நீதிமன்றத்தில் தணிக்கை வாரியத்தின் மேல்முறையீட்டு வழக்கு விசாரணை தொடங்கியது. உணவு இடைவேளைக்காக ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் தொடங்கிய விசாரணையில், தலைமை நீதிபதி ஸ்ரீவத்ஸா அமர்வு முன்பு காலை 11:30 மணியளவில் வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.படத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் சதீஸ் பராசரன் மற்றும் பிரதீப் ராய் ஆஜராகினர். சென்சார் போர்டு தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஆர்.எல்.சுந்தரேசன் ஆஜரானார். சென்சார் போர்டு தரப்பில், படத்திற்கு எதிராக புகார் வந்ததால் மறு ஆய்வுக் குழுவுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டதாகவும், 14 காட்சிகளை நீக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டதாகவும் வாதிடப்பட்டது.

நீதிபதிகள், மண்டல அலுவலர் படத்தைப் பார்த்தாரா என்று கேட்டபோது, அவர் பார்க்கவில்லை, குழுவால் மட்டுமே பார்க்கப்பட்டது என்று சென்சார் போர்டு பதிலளித்தது. சினிமாட்டோகிராபி விதிகளின்படி, வாரியமே படத்தைப் பார்த்து சான்றிதழ் பரிந்துரைக்கலாம் அல்லது மறு ஆய்வுக் குழுவுக்கு அனுப்பலாம் என்றும், புகார் வந்ததால் மறு ஆய்வுக் குழுவுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மறுஆய்வு குழு 20 நாள்களுக்குள் அமைக்கப்பட வேண்டும் என்றும், படம் மறுஆய்வு குழுவுக்கு அனுப்பப்பட்டிருந்தால் இவ்வழக்கு தேவையில்லாமல் போயிருக்கும் என்றும் சென்சார் போர்டு தரப்பு வாதிட்டது. படத்தை 9-ம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளதாகவும், 500 கோடி முதலீடு செய்துள்ளதாகவும் கூறி உடனடி நிவாரணம் கோர முடியாது என்றும் வாதிடப்பட்டது. வழக்கில் சென்சார் போர்டு பதிலளிக்க தனி நீதிபதி குறைந்தபட்ச கால அவகாசம் வழங்கியிருக்க வேண்டும் என்றும் சென்சார் போர்டு தரப்பு வலியுறுத்தியது. படத்தின் வெளியீடு தொடர்பான இறுதி முடிவு இந்த வழக்கின் விளைவைப் பொறுத்தே அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரசிகர்கள் இத்தீர்ப்பை ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.