சென்சார் இல்லை...மீண்டும் தள்ளிப்போகும் ஜனநாயகன்!

ஜனநாயகன் படத்திற்கு சென்சார் வழங்க உத்தரவிட்ட தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.

jana nayagan postponed

சென்னை :நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் வெளியீடு மீண்டும் தாமதமாகிறது. சென்சார் சான்றிதழ் வழங்க உத்தரவிட்ட தனி நீதிபதியின் தீர்ப்பை ரத்து செய்து, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீவத்சவா தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது. மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் (சிபிஎஃப்சி) தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த இந்த அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து, வழக்கை மேலும் விசாரணைக்கு ஒத்திவைத்துள்ளது.

இதனால் படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் கேள்விக்குறியாகியுள்ளது.படத்துக்கு ஆரம்பத்தில் உள்ளூர் சென்சார் குழு U/A சான்றிதழ் வழங்க பரிந்துரைத்த நிலையில், சிபிஎஃப்சி தலைவர் தன்னிச்சையாக மறு ஆய்வு குழுவுக்கு அனுப்பியது தான் சிக்கலுக்கு முக்கிய காரணம். இதை எதிர்த்து தயாரிப்பு நிறுவனம் KVN புரொடக்ஷன்ஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. தனி நீதிபதி பி.டி.ஆஷா, ஜனவரி 9 அன்று சான்றிதழ் உடனடியாக வழங்க உத்தரவிட்டார்.

ஆனால் சிபிஎஃப்சி உடனடியாக மேல்முறையீடு செய்து, தலைமை நீதிபதி அமர்விடம் இடைக்கால தடை பெற்றது. இதனால் பொங்கல் ரிலீஸ் தவறிய படம், மேலும் தாமதமாகிறது.தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவத்சவா மற்றும் நீதிபதி ஜி.அருள் முருகன் அடங்கிய அமர்வு, ஜனவரி 20 அன்று வழக்கை விரிவாக விசாரித்து தீர்ப்பை ஒத்திவைத்தது. சிபிஎஃப்சி தரப்பில் போதிய வாய்ப்பு வழங்காமல் தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்ததாக வாதிட்டனர். தயாரிப்பாளர் தரப்பில் ரூ.500 கோடி முதலீடு செய்துள்ள நிலையில், தாமதம் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்துவதாக வலியுறுத்தினர்.

உச்சநீதிமன்றமும் இடைக்கால தடையை ரத்து செய்ய மறுத்து, உயர்நீதிமன்ற அமர்வுக்கு திருப்பியது. இப்போது தலைமை நீதிபதி அமர்வின் தீர்ப்பு, தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்துள்ளது.இந்த தீர்ப்பால் ‘ஜனநாயகன்’ ரிலீஸ் மேலும் தள்ளிவைக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரம், பிப்ரவரி அல்லது அதற்குப் பிறகே படம் வெளியாக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

சென்சார் வாரியத்தின் நடைமுறைகள் மற்றும் நீதிமன்ற விசாரணை தொடரும் நிலையில், படக்குழு அடுத்த கட்ட நடவடிக்கைகளை ஆலோசித்து வருகிறது. விஜய்யின் இறுதி திரைப்படமாக கருதப்படும் இந்தப் படத்தின் வெளியீடு எப்போது என்பது இன்னும் உறுதியாகவில்லை.