டெல்லி : இந்தியாவில் தொடர்ந்து வசூலை குவித்து வரும் ஹாலிவுட் திகில் திரைப்படமான ‘ஆப்செஷன்’, 2026-ஆம் ஆண்டின் மிகப்பெரிய ஆச்சரிய வெற்றிப் படங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. பெரிய நட்சத்திரங்கள் அல்லது பிரபல திரைப்படத் தொடர்களின் ஆதரவு இல்லாமல் வெளியான இந்த படம், ரசிகர்களின் அமோக வரவேற்பால் பாக்ஸ் ஆபிஸில் புதிய சாதனைகளை நோக்கி பயணித்து வருகிறது.
வெளியான முதல் ஐந்து நாட்களில் மட்டும் இந்தியாவில் சுமார் ரூ.15 கோடி வசூல் செய்துள்ள இந்த படம், வார இறுதி நாட்களைத் தாண்டியும் தனது வேகத்தை குறைக்காமல் தொடர்ந்து ரசிகர்களை திரையரங்குகளுக்கு வரவழைத்து வருகிறது. குறிப்பாக செவ்வாய்க்கிழமை மட்டும் சுமார் ரூ.3.35 கோடி வசூல் செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது திங்கட்கிழமையை விட 45 சதவீதம் அதிகமாகும். மேலும், சனிக்கிழமையை விட அதிக வசூல் கிடைத்துள்ளதோடு, ஞாயிற்றுக்கிழமை வசூலுக்கு மிக நெருக்கமாக சென்றுள்ளது.
டிக்கெட் விற்பனையைப் பொறுத்தவரை, படத்தின் வெளியீட்டிலிருந்து இதுவரை அதிக பார்வையாளர்கள் திரையரங்குகளுக்கு வந்த நாளாக செவ்வாய்க்கிழமை பதிவாகியுள்ளது. இதனால், வார நாட்களிலும் படம் வலுவான வரவேற்பைப் பெற்று வருவது தெளிவாகியுள்ளது.
புதன்கிழமையிலும் முன்பதிவு விற்பனை சிறப்பாக இருப்பதாக கூறப்படுவதால், முதல் வார முடிவில் ‘ஆப்செஷன்’ ரூ.20 கோடி வசூலை எளிதில் எட்டும் என திரையுலக வட்டாரங்கள் கணித்துள்ளன.
இந்தப் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அதன் குறைந்த தயாரிப்பு செலவும் பார்க்கப்படுகிறது. வெறும் 10 கோடிக்குள் செலவில் உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம், இந்தியாவில் கிடைத்துள்ள வசூலின் மூலமே தனது தயாரிப்பு செலவை மீட்டுவிடும் நிலையை எட்டியுள்ளது. இதுவே படத்தின் வெற்றியின் உண்மையான அளவை வெளிப்படுத்துகிறது.
பொதுவாக இந்தியாவில் ஹாலிவுட் படங்கள் வெற்றி பெறுவதற்கு ‘அவெஞ்சர்ஸ்’, ‘ஸ்பைடர் மேன்’, ‘தி கன்ஜூரிங்’ போன்ற பிரபல திரைப்படத் தொடர்களின் ஆதரவு தேவைப்படும். ஆனால் எந்த பெரிய தொடருடனும் தொடர்பில்லாத ‘ஆப்செஷன்’, தனது விறுவிறுப்பான கதைக்களம், திகில் நிறைந்த காட்சிகள் மற்றும் வலுவான திரைக்கதை மூலம் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
2026-ஆம் ஆண்டு ஹாலிவுட் படங்களுக்கு இந்தியாவில் சிறப்பான ஆண்டாக அமைந்துள்ள நிலையில், ‘ஆப்செஷன்’ அதன் முக்கிய வெற்றிப் படங்களில் ஒன்றாக மாறியுள்ளது. விரைவில் வெளியாகவுள்ள ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’, ‘தி ஒடிஸ்ஸி’, ‘ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே’ போன்ற படங்களும் இந்த ஆண்டின் வசூல் சாதனைகளை மேலும் உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய வசூல் வேகத்தைப் பார்க்கும்போது, ‘ஆப்செஷன்’ இந்தியாவில் மட்டும் ரூ.50 கோடி வசூலை எட்டும் வாய்ப்பு இருப்பதாக பாக்ஸ் ஆபிஸ் நிபுணர்கள் கூறுகின்றனர்.
மேலும், உலகம் முழுவதும் படத்திற்கு கிடைத்து வரும் நேர்மறையான விமர்சனங்கள் காரணமாக அடுத்த சில வாரங்களிலும் வசூல் தொடர்ந்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை 1200 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ள நிலையில், பல நாடுகளில் கூடுதல் திரையரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ள காரணத்தால் உலகளவில் ரூ.1400 கோடி வசூலை தாண்டி புதிய சாதனைகளை இப்படம் படைக்கக்கூடும் என திரையுலக வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.
