சென்னை : தமிழ் சினிமாவில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எப்போதும் அதிகரிக்கும் கூட்டணிகளில் ஒன்றாக நடிகர் தனுஷ் மற்றும் இயக்குநர் மாரி செல்வராஜ் கூட்டணி பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், இருவரும் மீண்டும் புதிய திரைப்படத்தில் இணையவுள்ளதாக தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் அளித்த பேட்டியில் பேசிய அவர், தனுஷ் மற்றும் மாரி செல்வராஜ் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் மாதம் தொடங்க உள்ளதாக கூறினார். மேலும், இந்த திரைப்படம் வழக்கமான கதைக்களத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாகவும், ரசிகர்கள் இதுவரை பார்த்திராத வித்தியாசமான கதை அமைப்பைக் கொண்டதாகவும் இருக்கும் என்று குறிப்பிட்டார்.
படம் குறித்த கூடுதல் தகவல்களை தற்போது வெளியிட முடியாது என்றும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த அறிவிப்பு வெளியானதுமே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. ஏற்கனவே சமூக அரசியல் கருத்துக்களை வலுவாக பேசும் படங்களை இயக்கி தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கியுள்ள மாரி செல்வராஜ், தனுஷுடன் இணையும் புதிய படத்தில் என்ன மாதிரியான கதையை சொல்லப் போகிறார் என்ற ஆர்வம் எழுந்துள்ளது.
இதற்கிடையில், தமிழ் சினிமா ரசிகர்கள் நீண்ட காலமாக காத்திருக்கும் 'வடசென்னை பாகம் 2' திரைப்படம் குறித்தும் ஐசரி கணேஷ் முக்கிய தகவலை பகிர்ந்துள்ளார். தனுஷ் - மாரி செல்வராஜ் படத்தின் பணிகள் முழுமையாக நிறைவடைந்த பிறகு, 'வடசென்னை 2' திரைப்படத்திற்கான பணிகள் தொடங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான 'வடசென்னை' திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், அதன் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. தற்போது ஐசரி கணேஷ் அளித்துள்ள தகவல், அந்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.தனுஷ் - மாரி செல்வராஜ் புதிய படம் மற்றும் அதனைத் தொடர்ந்து 'வடசென்னை 2' பணிகள் தொடங்கும் என்ற தகவல், தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இரட்டை மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
