வடசென்னை 2-ல் தனுஷ் - சிம்பு மோதலா? வெற்றிமாறன் போடும் மாஸ்டர் பிளான்!

வெற்றிமாறனின் 'வடசென்னை 2' படத்தில் நடிகர்கள் தனுஷ் - சிம்பு இணைந்து நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Hero Image

சென்னை : தமிழ் சினிமா ரசிகர்கள் பல ஆண்டுகளாக ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் 'வடசென்னை 2' திரைப்படம் தொடர்பாக புதிய தகவல் ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இயக்குநர் வெற்றிமாறனின் படைப்பில் உருவாகவுள்ள இந்த திரைப்படத்தில் நடிகர்கள் தனுஷ் மற்றும் சிம்பு இணைந்து நடிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது 'அரசன்' என்ற பெயரில் உருவாகி வரும் படத்தில் சிம்பு கதாநாயகனாக நடித்து வருகிறார். படத்தின் அறிவிப்பு போஸ்டர், ப்ரோமோ உள்ளிட்டவை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இதனிடையே, 'வடசென்னை 2' கதைக்களத்துடன் 'அரசன்' திரைப்படத்திற்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.

கதைப்படி, 'வடசென்னை' முதல் பாகத்தில் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த அன்பு கதாபாத்திரமும், சிம்பு நடிக்கும் அரசன் கதாபாத்திரமும் நேருக்கு நேர் சந்திக்கும் முக்கியமான திருப்பம் திரைக்கதையில் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக, இரண்டு முன்னணி நட்சத்திரங்களும் ஒரே திரையில் தோன்றும் வாய்ப்பு உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

வெற்றிமாறன் உருவாக்கிய 'வடசென்னை' திரைப்படம் வெளியான போதே அதன் இரண்டாம் பாகம் குறித்து ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது. குறிப்பாக அன்பு கதாபாத்திரத்தின் அடுத்தகட்ட பயணம் என்ன என்பது ரசிகர்கள் மத்தியில் நீண்டகால கேள்வியாக இருந்து வருகிறது.

இந்நிலையில், தனுஷ் மற்றும் சிம்பு ஆகிய இருவரும் இணைந்து நடித்தால் அது தமிழ் சினிமாவின் மிகப்பெரிய திரைச்சம்பவங்களில் ஒன்றாக அமையும் என ரசிகர்கள் கருதுகின்றனர். இருப்பினும், இதுகுறித்து படக்குழு தரப்பில் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. ஆனால் வெளியாகியுள்ள தகவல்கள் உண்மையாக இருந்தால், 'வடசென்னை 2' திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

வடசென்னை 2-ல் தனுஷ் - சிம்பு மோதலா? வெற்றிமாறன் போடும் மாஸ்டர் பிளான்!