மது அருந்தியவர் வாகனம் ஓட்டும்போது, அவருடன் பயணித்தால் இனி அபராதம் என சென்னை காவல்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
சாலை விபத்துகள் தினம் தினம் எண்ணிக்கை இல்லாமல் நிகழ்ந்து வருகின்றன. பெரும்பாலும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள், சாலை விதிமுறை பின்பற்றாமல் வாகனம் ஓட்டுவதால் இந்த விபத்துகள் நடக்கின்றன.
இதனைக் கட்டுப்படுத்த போக்குவரத்துக் காவல்துறை, தற்போது புதிய விதிமுறைகளை பிறப்பித்துள்ளது. மது அருந்தி விட்டு வண்டி ஓட்டுபவர்களுடன் பயணிக்கும் நபருக்கும் வழக்கு பதிவு செய்யப்படும், மேலும் அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகர காவல்துறை அறிவித்துள்ளது.
இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டினால் ஓட்டுநர் உட்பட உடன் பயணிக்கும் நபருக்கும், மோட்டார் வாகன சட்ட விதிப்படி வழக்குப்பதிவு மற்றும் ரூ.1,000 முதல் ரூ.10,000 வரை அபராதமும் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தெரியாத நபருடன் ஆட்டோ, கார்களில் பயணிக்கும் போது இந்த விதிமுறை பின்பற்றப்படாது என்றும் கூறப்பட்டுள்ளது.