காஞ்சிபுரத்தில் திமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கொலை – 3 பேர் கைது!

Three AIADMK members have been arrested in connection with the murder of a former DMK panchayat leader from Kanchipuram.

காஞ்சிபுரத்தை சேர்ந்த திமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கொலை செய்யப்பட்ட நிலையில், அதிமுகவை சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மதூர் கிராம பகுதியை சேர்ந்த பொன்னுசாமி என்பவரின் மகன் தான் 56 வயதுடைய சண்முகம். இவர் திமுக முன்னாள் ஊராட்சி மன்றத்தின் தலைவராகவும், திமுக சாலவாக்கம் ஒன்றிய விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளராகவும் இருந்துள்ளார். மேலும், இவர் ரியல் எஸ்டேட் மற்றும் சாலை காண்ட்ராக்ட் பணிகளை செய்து வருவதாக கூறப்படுகிறது. சாலை காண்ட்ராக்ட் பணி ஒன்றின் போது இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அதிமுக பிரமுகர் ஒருவருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

வாலாஜாபத் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வரக்கூடிய சண்முகம் தினமும் தனது சொந்த ஊரான மதூர் கிராமத்திற்கு சென்று விட்டு இரவில்  வாடகை வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் வருவதை வழக்கமாக வைத்திருந்துள்ளார். அதே போல நேற்று இரவு 9.30 மணி அளவில் சண்முகம் மதூர் கிராமத்தில் இருந்து தனது வீட்டிற்கு செல்லும் பொழுது மதூர்  பெட்ரோல் பங்க் அருகில் இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் சண்முகத்தை வழிமறித்து இரும்பு ராடு கொண்டு முகத்தில் தாக்கியுள்ளனர்.

மேலும் அந்த இடத்திலேயே வைத்து அவரை கொடூரமாக வெட்டிக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சாலவாக்கம் போலீசார் உயிரிழந்த சண்முகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் இது தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்டம் எஸ்பி சுதாகர் அவர்கள் நேரில் பார்வையிட்டு கொலை செய்த மர்ம கும்பலை தீவிரமாக தேடும் பணியை மேற்கொண்டு வருகிறார். மேலும், முன்விரோதம் காரணமாக தான் கொலை நடைபெற்று உள்ளதா? வேறேதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருவதுடன், இது தொடர்பாக அதிமுக பிரமுகர் உள்பட 3 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.