தொடரும் பாலியல் குற்றம்..!தடகள பயிற்சியாளர் நாகராஜன் மீது மேலும் 7 மாணவிகள் புகார் ..!

7 students have lodged a sexual harassment complaint against athletics coach Nagarajan through WhatsApp

சென்னை தடகள பயிற்சியாளர் நாகராஜன் மீது மேலும் 7 மாணவிகள் வாட்ஸ்-அப் மூலமாக புகார் அளித்துள்ளனர்.

தமிழ்நாடு பிரைம் ஸ்போர்ட்ஸ் அகாடமி என்ற பெயரில் விளையாட்டு பயிற்சி மையம் நடத்தி வரும் தடகள பயிற்சியாளர் நாகராஜன், விளையாட்டு வீராங்கனைகளிடம் பயிற்சியின் போது பாலியல் தொந்தரவு அளித்ததாகவும், ஆபாசமாக பேசி வந்ததாகவும் சமூகவலைதளத்தில் புகார்கள் வந்தன.

மேலும்,கடந்த பல ஆண்டுகளாக தன்னை பாலியல் தொந்தரவு செய்ததுடன், தனது குடும்பத்திற்கும் கொலை மிரட்டல் விடுத்தார் என்று 19 வயது இளம்பெண் ஒருவர் நாகராஜன் மீது சென்னை பூக்கடை காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

இதைத்தொடர்ந்து,தடகள பயிற்சியாளர் நாகராஜன் மீது போக்சோ, கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் மீது பூக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர், காவல்துறை தன்னை கைது செய்ய வருவார்கள் என்று பயந்து நாகராஜன் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். பின் ராயப்பேட்டை அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக நாகராஜன் அனுமதிக்கப்பட்டார்.

இதனையடுத்து,சிகிச்சை முடிந்த உடனே,காவல்துறை நாகராஜனை கைது செய்து விசாரணை நடத்தியது.அந்த விசாரணைக்கு பிறகு விருகம்பாக்கத்தில் உள்ள நீதிபதி வீட்டில் நாகராஜன் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், தடகளப் பயிற்சியாளர் நாகராஜனை ஜூன் 11-ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.பின்னர்,நாகராஜன் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் உள்ளார்.

இந்நிலையில்,நாகராஜன் மீது மேலும் 7 மாணவிகள் வாட்ஸ்-அப் மூலமாக புகார் அளித்துள்ளனர்.இதனால்,நாகராஜனிடம் மீண்டும் விசாரணை நடத்தப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.