"குண்டுவெடிப்பு ஒரு தியாக நடவடிக்கை"...டெல்லி பயங்கரத்திற்கு முன் உமர் பேசிய வீடியோ!

டெல்லி செங்கோட்டை குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய தீவிரவாதி உமர் உன் நபியின் பழைய வீடியோ வெளியாகியுள்ளது.

Dr Umar

டெல்லி :செங்கோட்டை அருகே நவம்பர் 10, 2025 அன்று நடந்த கோரமான கார் குண்டுவெடிப்பில் 15 பேர் உயிரிழந்தனர்; 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட காரை ஓட்டிச் சென்று வெடிக்கச் செய்தவர் டாக்டர் உமர் நபி (வயது 34) என அடையாளம் காணப்பட்டார். ஃபரிதாபாத்தைச் சேர்ந்த இந்த மருத்துவர், தீவிரவாத அமைப்பொன்றுடன் தொடர்புடைய “வெள்ளைக்காலர்” பயங்கரவாதக் குழுவின் முக்கிய உறுப்பினராக இருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

குண்டுவெடிப்புக்கு சில வாரங்களுக்கு முன்பே உமர் நபி ஒரு வீடியோ பதிவு செய்திருந்தார்.  அந்த வீடியோ இப்போது வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில் அவர் தற்கொலை குண்டுவெடிப்பை “மிக உன்னதமான தியாக நடவடிக்கை” என்று போற்றிப் பேசுகிறார். “பெரும்பாலான மக்கள் தற்கொலை குண்டுவெடிப்பு என்றால் என்ன என்பதையே புரிந்து கொள்ளவில்லை. இது இஸ்லாமியப் போராளிகளின் உன்னத தியாகம்” என அவர் வாதிடுகிறார்.

இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கு முற்றிலும் எதிரான இந்தப் பார்வை, தவறான சித்தாந்தங்களால் அவர் மூளைச்சலவை செய்யப்பட்டிருக்கலாம் என விசாரணை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். விசாரணையில் தெரியவந்துள்ள தகவலின்படி, செங்கோட்டைக் குறிவைத்த இந்தத் தாக்குதல் தற்செயலாக நடந்ததல்ல மிகத் திட்டமிட்ட பெரிய அளவிலான தற்கொலைத் தாக்குதலின் ஒரு பகுதியாகவே இது இருந்திருக்கிறது. ஆனால் காரில் ஏற்றப்பட்ட வெடிபொருள் எதிர்பார்த்ததை விட முன்கூட்டியே வெடித்துவிட்டதால், இலக்கை முழுமையாகத் தாக்க முடியவில்லை என அதிகாரிகள் நம்புகின்றனர். இல்லாவிட்டால் உயிரிழப்பு பல மடங்கு அதிகமாகியிருக்கும் என்கிறார்கள்.

உமர் நபி தனது குழுவில் உள்ள மற்ற இளைஞர்களையும் இதே போன்ற தீவிரவாதச் சிந்தனையை நோக்கி இழுத்துச் செல்வதற்காகவே இந்த வீடியோவை பதிவு செய்திருக்கலாம் என புலனாய்வுத் துறை சந்தேகிக்கிறது. ஒரு படித்த மருத்துவரும், சமூகத்தில் மதிக்கப்பட்டவருமான அவர் எப்படி இவ்வளவு தீவிரமயமானார் என்பது தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறது. அவருடன் தொடர்புடைய வலையமைப்பு, நிதி ஆதாரங்கள், ஆன்லைன் தொடர்புகள் ஆகியவை தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. மேலும், டெல்லி குண்டுவெடிப்பு வழக்கு தற்போது என்ஐஏ (தேசிய புலனாய்வு முகமை) வசம் ஒப்படைக்கப்பட்டு முழு வீச்சில் விசாரணை நடந்து வருகிறது.

unknown node