மல்யுத்த வீராங்கனைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகக் கூறப்படும் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பிரிஜ் பூஷன் சரண் சிங், பாலியல் நோக்கமின்றி ஒரு பெண்ணைக் கட்டிப்பிடிப்பது அல்லது தொடுவது குற்றமல்ல என்று டெல்லி நீதிமன்றத்தில் பிரிஜ் பூஷன் தரப்பு வழக்கறிஞர் குழு தெரிவித்துள்ளது.
பாலியல் தொல்லை தொடர்பாக பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி மல்யுத்த வீராங்கனைகள் 7 பேர் குற்றம் சாட்டை முன் வைத்தனர். இதனை தொடர்ந்து, இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது அளித்த பாலியல் புகார் தொடர்பாக அவரை கைது செய்யக்கோரி ஒரு மாதத்துக்கு மேலாக டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் மல்யுத்த வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் ஈடுபட்ட பஜ்ரங் பூனியா, வினேஷ் போகத் உள்ளிட்ட முன்னணி வீரர், வீராங்கனைகள் தற்காலிகமாக தங்களது போராட்டத்தை ஒத்தி வைத்துள்ளனர். இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும் பாஜக எம்பியான பிரிஜ் பூஷன் மீது பாலியல் புகார்கள் கடந்த ஜனவரி மாதம் முன்வைக்கப்பட்டது.
மேலும், அவர் மீது வழக்குப்பதிவு செய்யவே வீரர்கள் சுப்ரீம் கோர்ட் வரை சென்று வழக்கு தொடர வேண்டி இருந்தது. பின்னர், தொடர் போராட்டம் நடத்தி வந்த நிலையில், மத்திய அமைச்சருடன் பேச்சுவார்த்தைக்கு பின் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
மேலும், பாலியல் துன்புறுத்தல் வழக்கில் பிரிஜ் பூஷனுக்கு டெல்லி ரூஸ் அவென்யூ நீதிமன்றம் ஜூலை 20 அன்று ஜாமீன் வழங்கியது. இந்த உத்தரவை நீதிபதி ஹர்ஜீத் சிங் ஜஸ்பால் பிறப்பித்தார். பிரிஜ் பூஷன் அனுமதியின்றி நாட்டை விட்டு வெளியேற முடியாது என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.
இந்த நிலையில், இந்த வழக்கு மீண்டும் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பாலியல் நோக்கமின்றி ஒரு பெண்ணைக் கட்டிப்பிடிப்பது அல்லது தொடுவது குற்றமல்ல. இந்த குற்றசாட்டுகள் 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் நடந்ததாகக் கூறப்படும் சம்பவங்களின் அடிப்படையில் 2023 இல் புகார் அளிக்கப்பட்டது. இது, கர்நாடகத்தின் பெல்லாரி அல்லது லக்னோவில் பதிவு செய்யப்பட்ட புகார்களின் அடிப்படையில் டெல்லியில் விசாரணை நடத்த முடியாது என்று பிரிஜ் பூஷன் தரப்பில் வழக்கறிஞர் கூறினார்.
