காவிரியை விருப்பம்போல் திறந்துவிட முடியாது..!

கர்நாடகாவால் இனி விருப்பம்போல் காவிரி நீரை தனது மாநில விவசாயிகளுக்கு திறந்துவிட முடியாது. காரணம், நீர் விடுவிப்பதை காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உன்னிப்பாக

கர்நாடகாவால் இனி விருப்பம்போல் காவிரி நீரை தனது மாநில விவசாயிகளுக்கு திறந்துவிட முடியாது. காரணம்,நீர் விடுவிப்பதை காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உன்னிப்பாக கவனித்து வருகிறது.

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இணங்க காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை மத்திய அரசு அமைத்தது. இதுகுறித்து மத்திய அரசிதழில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து மத்திய நீர்வள அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர் கூறியதாவது: முன்பு மத்திய அரசின் அனுமதியின்றி கர்நாடகா தனது மாநில விவசாயிகளுக்கு காவிரி நீரை விடுவித்து வந்தது. இனி, எதிர்காலத்தில் கர்நாடகாவால் இந்த சலுகையை அனுபவிக்க முடியாது என்றார் அந்த அதிகாரி.

கர்நாடகா, தமிழகம், கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட 4 மாநிலங்களிலுள்ள அணைகளில் தேக்கி வைக்கப்பட்டுள்ள நீரின் அளவு, அணைகளின் நீர்வரத்து, வெளியேறும் நீரின் அளவு, மழைப் பொழிவின் அளவு, எவ்வளவு நிலப்பரப்பு பாசன வசதியைப் பெற்றது, பயன்படுத்தப்பட்ட நீரின் அளவு உள்ளிட்ட விவரங்களை சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் வழங்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, சம்பந்தப்பட்ட மாநில அரசுகள், காவிரி நதிக் கரையிலுள்ள  முக்கியமான இடங்களில் சரியான நீர்வழி திசைதிருப்பு கட்டமைப்புகளை நிர்மாணிப்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும், அத்தகைய கட்டமைப்புகள் செயல்படுவதை தொடர்ந்து கண்காணிப்பது அவசியம் எனதெரிவிக்கப்பட்டுள்ளது.

காவிரி நீர் பங்கீடு தொடர்பான மேலாண்மை ஆணையத்தின் வழிகாட்டுதல்களை சம்பந்தப்பட்ட மாநிலங்கள் உறுதியாகப் பின்பற்ற வேண்டும். நீர் பங்கீடு தொடர்பான உத்தரவை அமல்படுத்த தவறினாலோ, ஒத்துழைக்க மறுத்தாலோ இதுகுறித்து மத்திய அரசின் உதவியை நாடலாம்.

எந்தவொரு மாநிலத்தின் நீர் பங்கீட்டில் தாமதம் அல்லது பற்றாக்குறை ஏற்பட்டால், அதற்கான உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கர்நாடகாவிலுள்ள பிலிகுண்டுலு பகுதியிலிருந்து காவிரி நீர் பங்கீடு கணக்கிடப்படும். நீர்ப்பாசன ஆண்டின் தொடக்கத்தில் (ஒவ்வொரு வருடமும் ஜூன் 1) குறிப்பிட்ட நீர்த்தேக்கங்களில் இருக்கவேண்டிய நீரின் அளவை ஆணையம் நிர்ணயிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.