நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி 352 இடங்களை கைப்பற்றி மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெறும் 52 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று தோல்வியை தழுவியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் தோல்வியையடுத்து அக்கட்சி தலைவர் ராகுல் காந்தி, பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இதனையடுத்து அவரை சமாதானப்படுத்தும் முயற்சிகள் நடைபெற்று வருகிற நிலையில், ஒரு மாதத்திற்கு காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்கள் டிவி சேனல்களில் பங்கேற்க அக்கட்சி தடை விதித்துள்ளது.
இது தொடர்பாக அக்கட்சி செய்தி தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜிவாலா, ‘டிவி விவாதங்களுக்கு செய்தி தொடர்பாளர்களை ஒரு மாதத்துக்கு அனுப்புவதில்லை என காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. காங்கிரஸ் பிரதிநிதிகளை சேனல்கள் அழைக்க வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.’ என்று தெரிவித்துள்ளார்.