சுற்றுலா பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்!

நேற்று கோவாவில் ஜிஎஸ்டி கவுன்சில் அதிகாரிகளுடன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அதிரடி வரி குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி ஹோட்டல் நிர்வாகிகளுக்கும் பல அதிரடி வரி குறைப்பினை மத்திய நிதி அமைச்சர் அறிவித்தார். வரிச்சலுகை இரு விதங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, 1000 ரூபாய்க்கு குறைவாக தினசரி வாடகை வசூலிக்கும் ஹோட்டல்களுக்கு ஜிஎஸ்டி வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
அதேபோல ஆயிரம் ரூபாய்க்கு மேலும் 7,500 ரூபாய் வரை வசூலிக்கும் ஹோட்டல்களின் ஜிஎஸ்டி வரியானது இதுவரை 28 சதவீதமாக இருந்து வந்த வரி, தற்போது 10 சதவீதம் குறைக்கப்பட்டு 18% என அதிரடி வரிச் சலுகை அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஹோட்டல் அதிபர்களும், சுற்றுலா பயணிகளும் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.