தகுதிநீக்கத்திற்கு பிறகு டெல்லியில் காங்கிரஸின் முக்கிய தலைவரான ராகுல்காந்தி பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.
அதாவது, 2019 பொதுத்தேர்தல் பரப்புரையில், எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற பெயர் இருக்கிறது என மோடி குறித்து அவதூறாக பேசிய வழக்கில், ராகுல் காந்தியை சூரத் நீதிமன்றம் குற்றவாளியாக அறிவித்துள்ளதோடு, 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்து இருந்தது. 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்றய தினம் ராகுல் காந்தியை எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்து மக்களவை செயலகம் அறிவித்தது.
இந்நிலையில், இன்று டெல்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் வைத்து, மதியம் 1 மணிக்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது, அதானி குழுமத்துடனான தொடர்பைத் திசைதிருப்ப பாஜக அரசு தன்னை லோக்சபாவில் இருந்து தகுதி நீக்கம் செய்ததாக ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
இந்த செய்தியாளர் சந்திப்பின் போது செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, தன்னை தகுதி நீக்கம் செய்தது பாஜக அரசின் கவனத்தை சிதறடிக்கும் தந்திரம் என்று கூறினார்.
ரூ.20,000 கோடி அதானி முதலீடு:
நாடாளுமன்றத்தில் ஒரு சில குறிப்பிட்ட கேள்விகளைக் கேட்டேன். அதில், அதானியின் ஷெல் நிறுவனங்களில் ரூ.20,000 கோடி முதலீடு செய்தது யார்? இது யாருடைய பணம்? என்ற அடுக்கடுக்கான கேள்வியை முன் வைத்ததாக கூறினார்.
மேலும், அதானி குழுமம் மற்றும் அவர்களின் நிதி பரிவர்த்தனைகள் பற்றிய கேள்விகளைக் கேட்பது மட்டுமே தனது ஒரே கவலை என்றும், பிரதமருக்கும் அதானிக்கும் இடையே உள்ள உறவு ஒரு நாள் நிச்சயம் வெளிப்படும் என்று கூறினார். மேலும், தனது குரலை அடக்க பாஜக அரசு மேற்கொண்ட முயற்சி தான் இந்த தகுதி நீக்கம் என குறிப்பிட்டார்.