சமோசா வாங்கணும் வண்டியை நிறுத்திக்கிறேன்...ரயிலை நிறுத்திய ஓட்டுநர்!

லோகோ பைலட் மிகவும் நிதானமாக ரயிலிலிருந்து இறங்கிச் சென்று சமோசா வாங்கி வரும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Hero Image

இந்தூர் : பொதுவாக ரயில்கள் ஏதேனும் அவசரத் தேவைக்கோ, சிக்னல் கோளாறுகளுக்காகவோ அல்லது பயணிகள் இறங்கவோ மட்டுமே குறிப்பிட்ட இடங்களில் நிறுத்தப்படும். ஆனால், மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் அருகே உள்ள ராவ் (Rau) பகுதியில், மிக வினோதமான மற்றும் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.

இந்தூர் - மௌ (Indore-Mhow) இடையே இயக்கப்படும் டெமு (DEMU) ரயிலின் ஓட்டுநர், பயணிகளின் பாதுகாப்பையும் நேரத்தின் மதிப்பையும் சற்றும் கருத்தில் கொள்ளாமல், ரயிலை தண்டவாளத்திற்கு இடையே பாதியிலேயே நிறுத்திவிட்டு, அருகில் இருந்த கடைக்குச் சென்று சமோசா வாங்கி வந்த சம்பவம் தற்போது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போலப் பரவி வருகிறது. அந்த வீடியோவில், ரயில் தண்டவாளத்தில் நின்றுகொண்டிருக்க, ஓட்டுநர் இன்ஜினிலிருந்து கீழே இறங்கிச் சென்று, தண்டவாளத்திற்கு அருகிலிருந்த ஒரு சிறிய உணவகத்தில் சமோசாக்களை வாங்குவது தெளிவாகப் பதிவாகியுள்ளது. அவர் நிதானமாகச் சமோசாவை வாங்கிக்கொண்டு மீண்டும் இன்ஜினுக்குத் திரும்பிய பின்னரே, அவருடன் இருந்த சக ஊழியர் ரயிலை இயக்கிச் சென்ற காட்சி காண்பவர்களை வியப்பிலும் கோபத்திலும் ஆழ்த்தியுள்ளது.

இப்பகுதியில் வசிக்கும் உள்ளூர் மக்கள் கூறுகையில், இது ஏதோ ஒருமுறை நடந்த தவறு அல்ல; பலமுறை அந்த ஓட்டுநர் ரயிலை இதே இடத்தில் நிறுத்திவிட்டு, அதே கடையில் சமோசா வாங்கிச் செல்வதை ஒரு வாடிக்கையாகவே வைத்துள்ளார் என்று குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த வீடியோ ரயில்வே நிர்வாகத்தின் கவனத்திற்குச் சென்றதும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்துப் பேசிய ரயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி முகேஷ் குமார், "இந்த விவகாரம் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. எந்தவொரு அதிகாரப்பூர்வ காரணமுமின்றி அல்லது சிக்னல் தேவையின்றி, ஒரு பணியாளர் தனது தனிப்பட்ட தேவைக்காகப் பொதுப் போக்குவரத்தான ரயிலை நடுவழியில் நிறுத்தியது உறுதி செய்யப்பட்டால், அவர் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்" என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

பொறுப்புமிக்க பணியில் இருப்பவர்கள், இது போன்ற அலட்சியமான செயல்களில் ஈடுபடுவது பயணிகளின் பாதுகாப்பை முற்றிலுமாகச் சீர்குலைப்பதாகும். இந்தச் சம்பவம் ரயில்வே பணியாளர்களின் கட்டுப்பாட்டு விதிமுறைகள் குறித்து மீண்டும் ஒருமுறை கடுமையான விவாதத்தை மக்கள் மத்தியில் எழுப்பியுள்ளது.

சமோசா வாங்கணும் வண்டியை நிறுத்திக்கிறேன்...ரயிலை நிறுத்திய ஓட்டுநர்!