பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!
இனி பாகிஸ்தான் தாக்கினால் கடுமையன பதிலடி கொடுக்கலாம் என ராணுவத்துக்கு முழு அதிகாரம் வழங்கி பிரதமர் மோடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி ரெசிஸ்டன்ட் ப்ரண்ட்’ (லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பு) பெரும்பாலும் சுற்றுலாப் பயணிகளை குறி வைத்து நடத்திய தாக்குதலில் பரிதாபமாக 26 பேர் உயிரிழந்தனர்.
இந்தத் தாக்குதல், இந்தியாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது அத்துடன் பாகிஸ்தானுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுவாக எழுந்தது. எனவே, இந்தியா தகுந்த பதிலடி கொடுத்து போரை தொடங்கியது உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த போர் எப்போது முடியும் என இரண்டு நாட்டு மக்களுக்கு பதற்றத்தில் இருந்த சூழலில், நேற்று போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், இதனைத்தொடர்ந்து இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உயர்மட்ட பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே நடந்த போர் குறித்து சில விஷயங்கள் பேசப்பட்டதுடன் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய ராணுவத்திற்கு முழு அதிகாரம் வழங்கி உத்தரவிட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
என்ன உத்தரவு?
பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிராக எந்தவொரு அத்துமீறல் (பயங்கரவாத தாக்குதல்கள், எல்லை மீறல்கள், அல்லது ஆயுதமேந்திய தாக்குதல்கள்) செய்தாலும், இந்திய முப்படைகளுக்கு (தரைப்படை, விமானப்படை, கடற்படை) உடனடியாக பதிலடி கொடுக்க முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
தாக்குதலின் இடம், நேரம், மற்றும் முறையை (நிலம், வான், அல்லது கடல் வழியாக) தீர்மானிக்க ராணுவ தளபதிகளுக்கு முழு சுதந்திரம் உள்ளது. இதற்கு முன்கூட்டிய அரசாங்க அனுமதி அவசியமில்லை. ஏனென்றால், பிரதமர் மோடி ஏற்கனவே இதற்கு முழு அனுமதி கொடுத்துள்ள காரணத்தால் அனுமதி இல்லாமல் பதிலடி தாக்குதல் நடத்தலாம்.
பிரதமர் மோடி கொடுத்த முழு உத்தரவின் அடிப்படையில் தாக்குதல் நிறுத்தத்தை மீறி இன்றும் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுக்கலாம் என இந்தியாவின் மேற்கு எல்லையில் உள்ள கமாண்டர்களுக்கு தலைமை தளபதி உபேந்திர திவேதி உத்தரவு கொடுத்துள்ளார்.