”பயங்கரவாதிகளை துல்லியமாகத் தாக்கியது, இந்தியாவுக்கு எந்த பாதிப்பும் இல்லை” – மக்களவையில் ராஜ்நாத் சிங்.!
ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக மக்களவையில் விவாதத்தில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கமளித்து வருகிறார்.

டெல்லி : அமைச்சர் ராஜ்நாத் சிங் மக்களவையில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்த விவாதத்தைத் தொடங்கி வைத்தார். ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து மக்களவையில் 16 மணி நேரம் விவாதம் நடைபெறவுள்ளது. இப்பொது, பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தியபோது என்ன நடந்தது என்பது குறித்து ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்து வருகிறார்.
மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் குறித்த விவாதத்தின் போது, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறுகையில்,, ”பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறேன். மே 6 மற்றும் 7ஆம் தேதி இந்தியப் படைகள் ஆபரேஷன் சிந்தூர் என்ற வரலாற்று சிறப்புமிக்க ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டன. இது வெறும் ராணுவ நடவடிக்கை மட்டுமல்ல, இந்தியாவின் இறையாண்மை.
ஆபரேஷன் சிந்தூர் இந்திய ராணுவ வீரர்களின் வலிமையை பறைசாற்றுவதாக அமைந்திருந்தது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் பாகிஸ்தானை சேர்ந்த சாமானிய மக்கள் யாரும் குறிவைக்கப்படவில்லை. பாகிஸ்தான் பயங்கரவாதிகளை மட்டுமே இந்திய ராணுவம் துல்லியமாகத் தாக்கியது, 9 பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் துல்லியமாக தாக்கப்பட்டன. 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
பாகிஸ்தான் தாக்குதலால் இந்தியாவுக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை. பாகிஸ்தான் ட்ரோன்களை நவீன வான் பாதுகாப்பு மூலம் தடுத்து பதிலடி தந்தோம், பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் பதிலடி, தற்காப்பு நடவடிக்கைதான். ஆபரேஷன் சிந்தூரின் நோக்கம் நிறைவேறியது. பாகிஸ்தான் முதலில் போர் நிறுத்தம் செய்யக் கோரியது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் இந்தியாவுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை. இந்தியாவின் எந்த ஒரு பகுதியையும் பாகிஸ்தான் தாக்க முடியவில்லை” என்றார்.