டெல்லி :தமிழ்நாட்டைச் சேர்ந்த அனுபவமிக்க பாஜக தலைவரும், தற்போதைய மகாராஷ்டிர ஆளுநருமான சி.பி.ராதாகிருஷ்ணன், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) துணைக் குடியரசுத் தலைவர் வேட்பாளராக நேற்று அறிவிக்கப்பட்டார்.
இந்த முடிவு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக பாராளுமன்ற ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்டது. தற்போது, துணை குடியரசு தலைவர் வேட்பாளராக தமிழ்நாட்டைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டிருப்பது பெரிதும் பேசுபொருளாக மாறியிருக்கிறது.
குறிப்பாக வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை ஒட்டி, இப்படியான கணக்கை பாஜக போட்டிருப்பதாக கூறுகின்றனர். என்டிஏ கூட்டணியின் பெரும்பான்மை ஆதரவு (422 எம்.பி.க்கள்) காரணமாக, 781 உறுப்பினர்களைக் கொண்ட தேர்தல் குழுவில் ராதாகிருஷ்ணனின் வெற்றி உறுதியாகக் கருதப்படுகிறது.
செப்டம்பர் 9 தேதி அன்று நடைபெறவுள்ள துணைக் குடியரசுத் தலைவர் தேர்தலில் இவர் போட்டியிடவுள்ளார்.மேலும் பரிந்துரைப் படிவங்களை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 21 ஆகும். இதற்கு முன்னர் ஜகதீப் தன்கர் உடல்நலக் காரணங்களால் பதவி விலகியதை அடுத்து இப்பதவி காலியாகியது.
இது தொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில், “திரு சி.பி.ராதாகிருஷ்ணன் தனது நீண்ட பொது வாழ்க்கையில் அர்ப்பணிப்பு, பணிவு மற்றும் அறிவாற்றலுடன் தனித்து நிற்கிறார். அவர் வகித்த பல்வேறு பதவிகளில், சமூக சேவை மற்றும் விளிம்புநிலை மக்களுக்கு அதிகாரமளிப்பதில் கவனம் செலுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் அவர் அடிமட்டத்தில் விரிவான பணிகளைச் செய்துள்ளார்,” எனப் பாராட்டியுள்ளார்.
