“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!
தாக்குதலில் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டதுமத்திய அரசின் துணையால் வலிமையடைந்தோம் என ஏர் மார்ஷல் ஏ.கே. பாரதி தெரிவித்துள்ளார்.

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு இரண்டு நாடுகளும் கலந்துபேசி போரை சுமூகமாக முடித்துக்கொண்டதாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும் பாகிஸ்தான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை அத்துமீறினால் பதிலடி வழங்கப்படும் எனவும் இந்தியா தெரிவித்து வருகிறது. எனவே, இன்னும் இந்த விவகாரம் தலைப்பு செய்தியாக இருந்து வருகிறது.
இந்த சூழலில், முப்படை அதிகாரிகள் டெல்லியில் இன்று கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து போரில் பல புதிய யுக்திகளை பாகிஸ்தான் கையாண்டது, அதை நாம் முறியடித்தோம் என தெரிவித்துள்ளனர். இந்திய விமானப்படையின் உயர் அதிகாரி ஏர் மார்ஷல் ஏ.கே. பாரதி, இந்தத் தாக்குதல்கள் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடத்தப்பட்டவை என்றும், ஆனால் பாகிஸ்தான் ராணுவம் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செயல்பட்டதால், இந்தியா தக்க பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டதாகவும் கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், “இந்தியாவைக் குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய, நீண்ட தூர ஏவுகணைகளை இந்தியா வெற்றிகரமாக தகர்த்து அழித்தது. அந்நாட்டு ராணுவத்தின் அத்துமீறலுக்கு பதிலளிக்கும் விதமாக கராச்சி, லாகூர் தளங்களில் நாம் தாக்குதல் நடத்தினோம். வான் பாதுகாப்பு அமைப்பை தாக்கி அழித்தோம்.
போர் நிறுத்தத்தை மீறினால் அதற்கு பதிலடி கொடுப்பது இந்தியாவின் கடமை,” என்று அவர் வலியுறுத்தினார். பாகிஸ்தான் தொடர்ந்து எல்லை மீறல்களில் ஈடுபட்டால் பதிலடி கொடுப்போம். “மத்திய அரசின் துணையால் வலிமையடைந்தோம்,” என்று கூறி, இந்திய விமானப்படையின் தயார் நிலை மற்றும் தொழில்நுட்ப மேம்பாடுகளுக்கு மத்திய அரசின் ஆதரவு முக்கிய பங்கு வகித்ததாக அவர் பாராட்டினார்.
அவரை தொடர்ந்து தலைமை இயக்குநர் லெப்டினன்ட் ஜெனரல் ராஜிவ் காய் பேசுகையில்”பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பாகிஸ்தான் ராணுவம் தலையீடு செய்தது பரிதாபத்திற்கு உரியது. அதனால்தான், நாம் தக்க பதிலடி கொடுப்பதை தேர்ந்தெடுத்தோம். தீவிரவாதிகளின் பிரச்னையை பாகிஸ்தான் ராணுவம் தனது பிரச்னையாக கருதுகிறது. பாக். ராணுவம் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக செயல்பட்டதால் பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு நாம் தள்ளப்பட்டோம்.
நமது தாக்குதல் பயங்கரவாதிகளுக்கு எதிரானது. ஆனால், பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது வருந்தத்தக்கது எனவும் கூறினார். அத்துடன், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் அறிவிக்கப்பட்ட பிறகும், பாகிஸ்தான் மக்களின் குடியிருப்புகள் மீது தாக்குதல்கள் நடத்தியதாக ராஜீவ் காய் குற்றம் சாட்டினார். இதற்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்ததாக அவர் குறிப்பிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.