இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரக்கூடும்- சஞ்சய் மல்ஹோத்ரா எச்சரிக்கை!

மேற்காசியாவில் பதற்றம் நீடித்தால் பெட்ரோல், டீசல் விலை உயரக்கூடும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் கணித்துள்ளார்.

Hero Image

டெல்லி : மத்திய கிழக்கில் (மேற்கு ஆசியா) நிலவும் போர் மோதல் தொடர்ந்தால், உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக இந்தியா பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்த வேண்டிய நிலை ஏற்படும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.

ஸ்விட்சர்லாந்தில் சுவிஸ் தேசிய வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் (IMF) சார்பில் நடைபெற்ற மாநாட்டில் பேசிய அவர், “ஈரான் போர் காரணமாக எரிசக்தி விலை உயர்வு இந்தியாவின் நெகிழ்வான பணவீக்க கட்டுப்பாட்டு இலக்கை சோதித்து வருகிறது. மேற்கு ஆசிய நெருக்கடி தொடர்ந்தால் சில்லறை எரிபொருள் விலையை உயர்த்துவது ‘நேரத்தின் விஷயம்’ தான்” என்றார்.

இதனால் போக்குவரத்து செலவு அதிகரிக்கும், பணவீக்கமும் உயரும் என ஆளுநர் எச்சரித்துள்ளார். வரும் ஜூன் 5ஆம் தேதி நடைபெறவுள்ள அடுத்த பணவிலக்கு கொள்கை கூட்டத்தில் முக்கிய வட்டி விகிதங்கள் குறித்த முடிவு எடுக்கப்படும். ஏப்ரல் 2026 மாதக் கூட்டத்தில் ரெப்போ விகிதத்தை 5.25 சதவீதத்தில் மாற்றாமல் நடுநிலை அணுகுமுறையில் வைத்திருந்தது ரிசர்வ் வங்கி.

வலுவான உள்நாட்டு வளர்ச்சியை ஊக்குவிக்கும் அதேவேளையில், உலகளாவிய நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில் பணவீக்கத்தையும் கண்காணிக்கும் “காத்திருந்து பார்க்கும்” உத்தியை ரிசர்வ் வங்கி பின்பற்றி வருகிறது.“நாங்கள் மேலும் மேலும் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறோம். தற்காலிக அதிர்ச்சியாக இருந்தால் அதை பொருட்படுத்தாமல் இருக்கலாம்.

ஆனால் அது நீடித்து நிலைத்திருந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுப்போம்” என்றும் மல்ஹோத்ரா தெரிவித்தார்.பிரதமர் மோடி சமீபத்தில் பொதுமக்களுக்கு எரிபொருள் சேமிப்புக்கு வேண்டுகோள் விடுத்த நிலையில், ரிசர்வ் வங்கி ஆளுநரின் இந்த எச்சரிக்கை முக்கியத்துவம் பெறுகிறது. மத்திய கிழக்கு நெருக்கடி நீடித்தால் வரும் நாட்களில் எரிபொருள் விலை உயர்வு தவிர்க்க முடியாததாகிவிடும் என்பது தெளிவாகிறது.