மணிப்பூரில் இரு பெண்களுக்கு நேர்ந்த கொடூரம் தொடர்பாக 19 வயதுடைய 5வது நபரை காவல்துறை கைது செய்துள்ளது.
கடந்த புதன்கிழமை அன்று சமூக வலைத்தளத்தில் மணிப்பூர் கலவரத்தின் போது இரு பெண்களை ஒரு கும்பல் ஆடைகளின்றி இழுத்து செல்லும் பார்ப்போர் நெஞ்சை பதறவைக்கும் வீடியோ ஒன்று வெளியாகி இருந்தது. கடந்த மே மாதம் தொடங்கிய இந்த கலவரமானது இந்த வீடியோ வெளியானது முதல் இந்தியா முழுக்க பரவி கடும் கண்டனங்களை பெற்று வருகிறது.
இந்த கொடூர குற்றமானது மே மாதம் 4 ஆம் தேதி மணிப்பூரில் காங்போக்பியில் நடந்துள்ளது. உரிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் குற்றவாளிகளை கண்டறிய முடியவில்லை என கூறிய காவல்துறை தற்போது வீடியோ வெளியானதை தொடர்ந்து கைது நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
ஏற்கனவே, முக்கிய குற்றவாளியான 32 வயதுடைய ஹுரெம் ஹெராதாஸ் சிங் கைது செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து மேலும் 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது 5வது நபராக, யும்லெம்பம் நுங்சிதோய் மெட்டே எனும் 19 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளான்.
வீடியோவில் காணப்பட்ட இரு பெண்களில் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார் என்றும், அந்த பெண்களில் ஒருவரின் கணவர் முன்னாள் ராணுவ வீரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
