சித்தராமையா ‘காலமானார்’ என மொழிபெயர்ப்பு – சர்ச்சையில் சிக்கிய மெட்டா!
கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா ‘காலமானார்' என ஃபேஸ்புக் ஜெனரேட் செய்த தானியங்கி மொழி பெயர்ப்பால் தற்போது சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

டெல்லி : கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவைப் பற்றிய மெட்டாவின் ஃபேஸ்புக் தானியங்கி மொழிபெயர்ப்பு பிழையால் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. முதலமைச்சர் அலுவலகத்தின் அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில், மறைந்த நடிகை சரோஜா தேவியின் உடலுக்கு “முதல்வர் சித்தராமையா அஞ்சலி செலுத்தினார்” என்று கன்னடத்தில் பதிவிடப்பட்டிருந்தது.
ஆனால், ஃபேஸ்புக்கின் தானியங்கி மொழிபெயர்ப்பு இதை ஆங்கிலத்தில் “முதல்வர் சித்தராமையா நேற்று காலமானார்” என்று தவறாக மொழிபெயர்த்தது. இந்த பிழை, பொதுமக்கள் மத்தியில் குழப்பத்தையும், சமூக வலைதளங்களில் பரவலான விவாதங்களையும் தூண்டியது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, முதலமைச்சரின் ஊடக ஆலோசகர் கே.வி. பிரபாகர், மெட்டாவுக்கு முறையாக கடிதம் எழுதி, இந்த தவறை உடனடியாக சரிசெய்ய வலியுறுத்தியுள்ளார்.
அவர், “மெட்டாவின் தானியங்கி மொழிபெயர்ப்பு உண்மைகளை திரித்து, பயனர்களை தவறாக வழிநடத்துகிறது. குறிப்பாக, அதிகாரபூர்வ தகவல்களில் இத்தகைய பிழைகள் ஆபத்தானவை,” என்று கூறினார். மேலும், சமூக வலைதள தளங்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும், மக்கள் இத்தகைய மொழிபெயர்ப்பு பிழைகளை உணர்ந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
இந்த பிழை, தொழில்நுட்ப நிறுவனங்களின் தானியங்கி மொழிபெயர்ப்பு அமைப்புகளின் நம்பகத்தன்மை குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. குறிப்பாக, முக்கியமான மற்றும் உணர்வுபூர்வமான தகவல்களை தவறாக மொழிபெயர்ப்பது, பொதுமக்களின் நம்பிக்கையை பாதிக்கும் என்று விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மெட்டா இந்த பிழையை சரிசெய்ய நடவடிக்கை எடுத்து வருவதாகவும், இதற்கு மன்னிப்பு கோரியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த சர்ச்சை, சமூக வலைதளங்களில் தானியங்கி மொழிபெயர்ப்பு கருவிகளைப் பயன்படுத்துவதில் மேலும் கவனம் தேவை என்பதை உணர்த்தியுள்ளது. முதலமைச்சர் சித்தராமையா, தான் நலமுடன் இருப்பதாகவும், இந்த தவறான மொழிபெயர்ப்பு குறித்து மக்கள் கவலைப்பட வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார். இந்த விஷயம் சர்ச்சையாக வெடித்த நிலையில் மெட்டா சரி செய்து தற்போது அவருடைய பதிவு சரியாக காட்டுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
வயலில் விவசாயிகளை நேரடியாக சந்தித்து பேசிய இபிஎஸ்.!
July 18, 2025