டெல்லி : ஜந்தர் மந்தர் பகுதியில் நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக மாணவர்களும் ஆசிரியர்களும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் (JNU) மற்றும் டெல்லி பல்கலைக்கழகம் ஆகியவை முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளன. இந்தப் போராட்டங்களில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் யாரும் பங்கேற்க வேண்டாம் என்றும், மீறிப் பங்கேற்றால் கடுமையான சட்டரீதியான மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் பல்கலைக்கழக நிர்வாகங்கள் தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை 20-ம்தேதி அன்று டெல்லியின் வீதிகள் கடுமையான போராட்டக் களமாக மாறின. 2026 நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தியும், பொதுத்தேர்வு முறைகளில் சீர்திருத்தங்களைக் கோரியும் 'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி' (CJP) தலைமையில் மாணவர்கள் பேரணியைத் தொடங்கினர்.
செயற்பாட்டாளர் சோனம் வாங்சுக் காவல்துறையினரால் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, போராட்டத்தில் மாணவர்களின் வருகை திடீரெனப் பெருமளவில் அதிகரித்தது. ஜந்தர் மந்தர் பகுதி முழுவதும் மாணவர்கள், ஓய்வுபெற்ற ஆசிரியர்கள், பேராசிரியர்கள், ஆர்வலர்கள் மற்றும் பெற்றோர்களால் நிரம்பியது.
நாடாளுமன்றத்த நோக்கிச் செல்ல முயன்ற போராட்டக்காரர்களைக் கேரள இல்லம் அருகே காவல்துறையினரும் அதிவிரைவுப் படையும் (RAF) தடுத்து நிறுத்தின. தடுப்புகளை மீறிச் செல்ல முயன்றவர்கள் மீது தடியடி, கண்ணீர் புகை குண்டுகள் மற்றும் தண்ணீர் பீய்ச்சியடிக்கப்பட்டன. கூடுதல் டிசிபி சந்தீப் லம்பா பெண் ஒருவர் மீது தாக்குதல் நடத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அவர் போராட்டக் களத்திலிருந்து மாற்றப்பட்டாலும், இதுவரை துறை ரீதியான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
போராடுபவர்களைத் தடுத்து நிறுத்த டெல்லி காவல் துறை சோதனைச் சாவடிகளை அமைத்து இளைஞர்களைத் தடுத்து வருவதாகவும், முகநூல் மற்றும் அடையாளச் சோதனைகள் மூலம் தரவுகளைச் சேகரிப்பதாகவும் சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
