தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!
தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் தரும் நாடு பாதுகாப்பாக இருக்காது என்பதை பாகிஸ்தானுக்கு உணர்த்தியுள்ளோம் என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் நடவடிக்கையாக , இந்தியா பாகிஸ்தானின் ஆதரவுடன் இயங்கும் லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான ‘தி ரெசிஸ்டன்ட் ப்ரண்ட்’ என்ற தீவிரவாத அமைப்பு தான் இந்த தாக்குதலை நடத்தியாக குற்றம்சாட்டி போரை தொடங்கியது. இந்தியா பாகிஸ்தான் போர் வெடித்த காரணத்தால் உலக அளவில் பரபரப்பு ஏற்பட்டது.
அதனை தொடர்ந்து நேற்று போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அறிவிக்கப்பட்டது. பாகிஸ்தானின் கோரிக்கையை ஏற்று, துப்பாக்கிச் சண்டையும், ராணுவ நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டிருப்பதாக மத்திய வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி நேற்று அறிவித்தும் இருந்தார். இருப்பினும், போர் குறித்து பலரும் பேசி வருகிறார்கள்.
அந்த வகையில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் தரும் நாடு பாதுகாப்பாக இருக்காது என்பதை பாகிஸ்தானுக்கு உணர்த்தியுள்ளோம் என கூறியுள்ளார். மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உத்தரப் பிரதேசத்தின் லக்னோவில் பிரம்மோஸ் ஏவுகணை தயாரிப்பு மையத்தைத் திறந்து வைத்து இது குறித்து அவர் பேசும்போது ” எல்லையில் உள்ள ராணுவ நிலைகளுடன் மட்டும் நமது நடவடிக்கையை நிறுத்திவிடவில்லை. இந்தியப் படைகளின் முழக்கம் பாகிஸ்தானின் ராணுவ தலைமையகமான ராவல்பிண்டி வரை சென்றுள்ளது. அங்குள்ள பல ராணுவ இலக்குகளைத் தாக்கி வலுவான பதிலடியை வழங்கியது.
தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் தரும் நாடு பாதுகாப்பாக இருக்காது என்பதை பாகிஸ்தானுக்கு உணர்த்தியுள்ளோம். எனினும், பொதுமக்களை இலக்காக வைத்து நாம் தாக்குதல்கள் நடத்தவில்லை. இந்தியாவின் தாக்குதல்கள் தீவிரவாத முகாம்களை மட்டுமே குறிவைத்து, பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் துல்லியமாக மேற்கொள்ளப்பட்டது. பிரம்மோஸ் ஏவுகணை தயாரிப்பு மையம் இந்தியாவின் பாதுகாப்பு வலிமையை மேலும் வலுப்படுத்தும் என்றும், உள்நாட்டு ஆயுத உற்பத்தித் திறனை இன்னும் மேம் படுத்தும் எனவும் அவர் தெரிவித்தார்.