அமலாக்கத்துறை இயக்குனர் சஞ்சய் மிஸ்ரா செப்டம்பர் 15 வரையில் பதவியில் தொடரலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2018ஆம் ஆண்டு அமலாக்கத்துறையின் தலைமை இயக்குனராக சஞ்சய் குமார் மிஸ்ரா நியமிக்கப்பட்டார். அப்போது இருந்த விதிகளின் படி, அமலாக்கத்துறை இயக்குனரின் பதவிக்காலம் 2 ஆண்டுகள் மட்டுமே. ஆனால், குடியரசு தலைவர் ஒப்புதல் பெற்று 3 ஆண்டுகள் நியமிக்கப்படுவதாக மத்திய அரசு 2021இல் அறிவித்து இருந்தது. இவ்வாறு 3 முறை சஞ்சய் மிஸ்ரா பதவி காலம் நீட்டிக்கப்பட்டு இருந்தது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து தொண்டு நிறுவனம் ஒன்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தது. அமலாக்கத்துறை இயக்குனர் சஞ்சய் குமார் மிஸ்ரா மத்திய அரசுக்கு சாதகமான செயல்படுகிறார் என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.
இந்த வழக்கு விசாரணை முடிந்து , அண்மையில் பி.ஆர்.கவாய், விக்ரம் நாத், சஞ்சய் கரோல் என 3 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு, குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்த பதவிக்காலம் நீட்டிப்பை ஏற்றுக்கொள்கிறோம் எனவும் , ஆனால் சஞ்சய் குமார் மிஸ்ராவின் பதவி காலத்தை நீடிக்க முடியாது எனவும் , அவரை தவிர வேறு திறமையான அதிகாரிகள் இல்லையா என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பி, சஞ்சய் மிஸ்ரா பதவி நீட்டிப்பை ஏற்க மறுத்து உத்தரவிட்டு இருந்தனர்.
இதனை எதிர்த்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மனு அளித்து இருந்தது. இந்த கோரிக்கை மனு மீதான விசாரணை இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் வாதிடுகையில், வரும் செப்டம்பர் மாதம் சர்வதேச அளவில் சட்ட விரோத பணப்பரிவர்த்தனை பயங்கரவாத பணப்பரிவர்த்தனை ஆகியவற்றை கண்காணிக்கும் குழு இந்தியா வருகிறது. அப்போது இந்தியா சார்பில் இதுவரை அமலாக்கத்துறை மூலம் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மீதான கருத்து பரிமாற்றம் மிக முக்கியம். தேசத்தின் நலன் கருதி அக்டோபர் மாதம் வரையில் சஞ்சய் மிஸ்ரா பதவிக்காலத்தை நீட்டிக்க உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு கோரிக்கை வைத்தது.
இந்த வாதத்தை ஏற்று, வரும் செப்டம்பர் 15 வரையில் சஞ்சய் மிஸ்ரா பதவி காலத்தை நீட்டிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் எக்காரணம் கொண்டும் செப்டம்பர் 15க்கு பிறகு அவரது பதவி நீட்டிக்கப்பட கூடது என்றும், பதவி நீட்டிக்க கோரும் எந்த ஒரு கோரிக்கையையும் உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொள்ளாது என்றும் நீதிபதி பி.ஆர்.கவாய் அடங்கிய உச்சநீதிமன்ற நீதிபதி அமர்வு உத்தரவிட்டது.
