கனமழையால் சோகம்: ராஜஸ்தானில் பள்ளி கட்டடம் இடிந்து விழுந்து 6 குழந்தைகள் பலி.!
ராஜஸ்தானின் ஜலாவரில் உள்ள அரசுப் பள்ளிக் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 7 குழந்தைகள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் பீப்லோடி கிராமத்தில் நடந்துள்ளது.

ராஜஸ்தான் : ராஜஸ்தான் மாநிலம் ஜலாவரின் மனோகர்தனா பகுதியில் உள்ள பிப்லோடி கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியின் பாழடைந்த கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் இதுவரை 6 குழந்தைகள் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது . மேலும், 27 குழந்தைகள் காயமடைந்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் 2 குழந்தைகளின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த விபத்து நடந்த நேரத்தில் சுமார் 60 முதல் 70 குழந்தைகள் பள்ளியில் இருந்தனர். தகவலின்படி, இடிபாடுகளுக்கு அடியில் புதைந்திருந்த அனைத்து குழந்தைகளும் வெளியே எடுக்கப்பட்டுள்ளனர்.
கட்டிடம் இடிந்து விழுந்தவுடன் உள்ளூர் கிராமவாசிகள், ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகத்தின் உதவியுடன் மீட்புப் பணிகள் தொடங்கப்பட்டன. பின்னர், ஜேசிபி உதவியுடன் இடிபாடுகளை அகற்றி குழந்தைகள் வெளியே எடுக்கப்பட்டனர். காயமடைந்தவர்கள் ஜலாவரின் மனோகர்தனா மருத்துவமனை மற்றும் எஸ்ஆர்ஜி மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
மருத்துவமனைகளில் நிர்வாகமும் மருத்துவத் துறையும் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளைச் செய்துள்ளன. விபத்துக்குப் பிறகு, அம்மாநில கல்வி அமைச்சர், விபத்து குறித்து உயர் மட்ட விசாரணை நடத்தப்படும் என்றும், காயமடைந்த குழந்தைகளுக்கு அரசு செலவில் சிகிச்சை அளிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.