மேற்கு வங்கம் : தமிழகத்தில் இன்று சட்டமன்ற தேர்தல் நடைபெறுவது போல மேற்குவங்கத்திலும் இன்று முதற்கட்டமாக வாக்குப்பதிவு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. 294 தொகுதிகள் கொண்ட மேற்கு வங்கத்தில் இரண்டாம் கட்டமாக வரும் ஏப்ரல் 29-ஆம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் மக்கள் பலரும் தங்களுக்கான வாக்குச்சாவடிக்கு சென்று வாக்கு பதிவு செய்து வருகிறார்கள். இந்நிலையில், இந்திய தேர்தல் ஆணையத்தின்படி, மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 23 அன்று 152 தொகுதிகளில் தொடங்கியது.
காலை 11 மணி வரை 41.1% வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது. அதே நேரத்தில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் 37.5% வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது. மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 294 சட்டமன்றத் தொகுதிகளில், இந்தக் கட்டத்தில் 152 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இதில் வட வங்க மாவட்டங்களில் 54 தொகுதிகளும், மீதமுள்ள தொகுதிகள் முர்ஷிதாபாத், நாடியா, பீர்பூம் மற்றும் ஹூக்ளி ஆகிய மாவட்டங்களிலும் பரவியுள்ளன.குறிப்பாக, வட வங்கத்தில் பாஜகவின் பலத்தை மதிப்பிடுவதற்கும், ஆளும் அனைத்திந்திய திரிணாமூல் காங்கிரஸ் இழந்த செல்வாக்கை மீண்டும் பெற்றுள்ளதா என்பதை அறிவதற்கும் இந்தக் கட்டம் முக்கியமானதாகக் கருதப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
