சென்னை : தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான அஜித்குமாரின் வரவிருக்கும் புதிய படமான ‘டேர் டெவில்’ (AK64) குறித்த தகவல்கள் தற்போது சினிமா வட்டாரங்களில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படம், ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் வெளிவந்து வெற்றிபெற்ற 'குட் பேட் அக்லி' படத்தைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக இணைந்துள்ள படமாகும்.
குறிப்பாக, இந்தப் படத்தை அஜித்குமாரின் மனைவியும், முன்னாள் நடிகையுமான ஷாலினி அஜித்குமார் தனது சொந்தத் தயாரிப்பு நிறுவனமான 'Bravehearts Production' கீழ் தயாரிக்கிறார். ஷாலினி அஜித்குமார் தயாரிப்பாளராகக் களமிறங்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
கணிக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட ப்ரீ-பிசினஸ்
'குட் பேட் அக்லி' படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, அஜித்குமாரின் மார்க்கெட் மதிப்பு மேலும் உயர்ந்திருக்கிறது. அதன் தொடர்ச்சியாக, 'டேர் டெவில்' திரைப்படத்தின் ப்ரீ-பிசினஸ் (Pre-business) வணிக மதிப்பு தற்போது கோடிகளில் தாறுமாறாக உயர்ந்துள்ளது. சினிமா வட்டாரங்களின் கணிப்புப்படி, இந்தப் படத்தின் ஒட்டுமொத்த ப்ரீ-பிசினஸ் மதிப்பு தோராயமாக ரூ.175 கோடி முதல் ரூ.185 கோடி வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வணிக எதிர்பார்ப்பு விவரம்
தமிழ்நாடு திரையரங்க உரிமை (Theatrical Rights): தமிழ்நாட்டில் மட்டும் இப்படத்தின் தியேட்டர் உரிமம் சுமார் ரூ.60 கோடி வரை விலைபோகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
OTT மற்றும் டிஜிட்டல் உரிமை: உலகளாவிய ஓடிடி (OTT) உரிமைகள் மூலமாகப் படத்திற்குச் சுமார் ரூ.40 கோடி வரை விலை நிர்ணயிக்கப்படலாம்.
தொலைக்காட்சி சாட்டிலைட் உரிமை: தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமைகள் (Satellite Rights) சுமார் ரூ.30 கோடி வரை செல்லும் எனத் கணிக்கப்பட்டுள்ளது.
அஜித்தின் தனிப்பட்ட முடிவு
தற்போதைய தமிழ்சினிமா சந்தையில் தனது உண்மையான வணிகத் திறன் மற்றும் மார்க்கெட் மதிப்பை விடக் குறைவாகத் தனது படங்கள் மதிப்பிடப்படுவதாக நடிகர் அஜித்குமார் கருதுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தனது உண்மையான வசூல் மற்றும் வணிக பலத்தை நிரூபிக்கும் ஒரு சரியான வாய்ப்பாகவே 'டேர் டெவில்' படத்தை அவர் பார்க்கிறார்.
மேலும், தனது குடும்பத்தின் புதிய தயாரிப்பு நிறுவனமான 'Bravehearts Production' மூலம் இந்தப் படம் தயாரிக்கப்படுவதால், படத்தின் வியாபார விஷயங்களிலும் அஜித் மிகத் துல்லியமான திட்டமிடலுடன் செயல்பட்டு வருவதாகத் திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
