மக்களிடம் சென்று கேட்போம்... செப்டம்பரில் CJP-வின் மெகா பிரச்சாரம் - அபிஜித் தீப்கே!

CJP தலைவர் அபிஜித் தீப்கே, 'Kya Bolti Public' என்ற பெயரில் நாடு முழுவதும் மக்களை சந்திக்கும் பிரச்சாரத்தை வரும் செப்டம்பரில் தொடங்குவதாக அறிவித்துள்ளார்.

Hero Image

சத்ரபதி : சம்பாநகரில் உள்ள கட்சியின் தலைவர் அபிஜித் தீப்கே இல்லத்தில், 'காக்ரோச் ஜனதா கட்சி'யின் (CJP) முக்கியக் குழுக் கூட்டம் இரண்டு நாட்கள் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சௌரவ் தாஸ், அசுதோஷ் ரான்கா மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் கட்சியின் தற்போதைய நிலை, எதிர்கால அரசியல் நகர்வுகள் மற்றும் மக்கள் பிரச்சனைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற கூட்டுக் செய்தியாளர் சந்திப்பில் கட்சியின் எதிர்காலப் பணிகள் குறித்த முக்கிய அறிவிப்புகளை அபிஜித் தீப்கே வெளியிட்டார்.

குறிப்பாக, வரும் செப்டம்பர் மாதத்தில் நாடு முழுவதும் 'கியா போல்டி பப்ளிக்' (Kya Bolti Public) என்ற பெயரில் மாபெரும் மக்கள் தொடர்பு இயக்கத்தை (Campaign) தொடங்க உள்ளதாக அவர் அறிவித்தார்.

மிகப்பெரிய வெற்றி

பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அபிஜித் தீப்கே, தர்மேந்திர பிரதானின் ராஜினாமா விவகாரத்தைக் குறிப்பிட்டு, அது போராட்டத்தின் மூலம் கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்று தெரிவித்தார். இருப்பினும், அதைவிடப் பெரிய சாதனை என்பது பொதுமக்களின் மனதில் கடந்த சில ஆண்டுகளாக அரசால் உருவாக்கப்பட்ட பயம் முற்றிலுமாக விலகியிருப்பதுதான் என்றார். தற்போது மக்கள் தாங்களாகவே முன்வந்து கேள்விகளை எழுப்பத் தயாராகிவிட்டதாகவும், தேவைப்பட்டால் வீதிகளில் இறங்கிப் போராடவும் தயாராக இருப்பதாகவும் அவர் பெருமிதத்துடன் கூறினார்.

காக்ரோச் ஜனதா கட்சியின் கொள்கைகள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில்தான் அமைந்திருக்கும் என்றும், மகாத்மா காந்தி, டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் மற்றும் பண்டித ஜவஹர்லால் நேரு ஆகியோரின் கனவு இந்தியாவை உருவாக்குவதே கட்சியின் லட்சியம் என்றும் அவர் தெளிவுபடுத்தினார். மேலும், மதச்சார்பின்மை, ஜனநாயகம் மற்றும் சமூகநீதி ஆகிய மதிப்புகளின் மீது கட்சி அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டுள்ளது என்றார்.

கியா போல்டி பப்ளிக் ஸ்டெப்

புதிதாகத் தொடங்கப்பட உள்ள 'கியா போல்டி பப்ளிக்' பிரச்சாரத்தின் மூலம், நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து குடிமக்களின் பிரச்சனைகளையும் எதிர்பார்ப்புகளையும் நேரடியாகக் கண்டறியப் போவதாக தீப்கே தெரிவித்தார். தற்போதைய அரசியல் கட்சிகளும் அரசும் பொதுமக்களிடம் இருந்து விலகிச் சென்றுவிட்டதாகவும், குறிப்பாக 35 வயதுக்குட்பட்ட இளைஞர்களின் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் எதிர்காலம் போன்றவற்றை முற்றிலுமாகப் புறக்கணிப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

இன்றைய காலகட்டத்தில் கல்வி என்பது சாதாரண மக்களுக்கு எட்டாக் கனவாகிவிட்டதாகவும், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கோச்சிங் சென்டர்களின் கட்டண உயர்வு காரணமாகக் கல்வி என்பது ஒரு பெரிய கடன்பளுவாக மாறிவிட்டதாகவும் அவர் கவலை தெரிவித்தார். கல்வி என்பது அடிப்படை உரிமை என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், அதன் வணிகமயமாக்கலைத் தடுத்து கல்வித்துறையில் தீவிர சீர்திருத்தங்களைக் கொண்டுவருவதே கட்சியின் முதன்மையான நோக்கம் என்றார்.

மேலும், இந்தச் சந்திப்பின் போது நீதித்துறை, ஊடகம் மற்றும் வேலைவாய்ப்பின்மை குறித்தும் தனது கடுமையான வாதங்களை அபிஜித் தீப்கே முன்வைத்தார். பொதுமக்களின் வழக்குகள் மீது உரிய நேரத்தில் தீர்வு கிடைக்காததால் நீதித்துறையின் மீது குடிமக்களுக்கு உள்ள நம்பிக்கை குறைந்து வருவதாகக் கூறிய அவர், அரசாங்கத்தைக் கேள்வி கேட்பதை நிறுத்திவிட்டதால் ஊடகங்கள் தன் நம்பகத்தன்மையை இழந்துவிட்டன என்றும் குற்றம்சாட்டினார்.

மக்களிடம் சென்று கேட்போம்... செப்டம்பரில் CJP-வின் மெகா பிரச்சாரம் - அபிஜித் தீப்கே!