பாகிஸ்தானுக்கு சிந்து நதி தண்ணீர் நிறுத்தம்? புதிதாக 6 அணைகள் கட்ட அரசு திட்டம்!
ஜம்முவில் செனாப் நதியின் மீது கட்டப்பட்டுள்ள சலால் மற்றும் பாக்லிஹார் அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. வனவிலங்குகளுக்காக மட்டும் ஒரே ஒரு மதகு வழியாக நீர் திறந்துவிடப்படுகிறது.

டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள் தொடர்ந்து வருகின்றன. இதனால் இரு நாடுகளும் எதிரெதிர் நாடுகளுக்கு எதிரான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே இரு நாடுகளுக்கு இடையேயான சிம்லா போர் நிறுத்த ஒப்பந்தத்தை பாகிஸ்தான் அரசு நிறுத்தியுள்ளதால் இரு நாடுகளும் தங்கள் பாதுகாப்பு படைகளை பலப்படுத்தி வருகின்றன.
அதேபோல, பாகிஸ்தானுக்கு இந்தியாவில் இருந்து பாயும் சிந்து நதியை தடுத்த நிறுத்த இந்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. அதற்கான நடவடிக்கைகளிலும் மத்திய அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. சிந்து நதியில் இருந்து ஜீலம், செனாப், ரவி, பியாஸ், சட்லஜ் ஆகிய நதிகள் பாகிஸ்தானுக்குள் பாய்கின்றன. பாகிஸ்தானில் 90% விவசாயம் சிந்து நதியை நம்பியே உள்ளன.
இப்படியான சூழலில் தான் மத்திய அரசு செனாப் நதி வழியாக தண்ணீர் செல்வதை தற்போது பெரும்பாலும் தடுத்துள்ளது. ஜம்முவில் உள்ள அக்னூர் பகுதியில் உள்ள செனாப் நதியின் நீர்மட்டம் பல ஆண்டுகளுக்கு பிறகு குறைந்துள்ளது. இந்த செனாப் நதியின் மீது கட்டப்பட்டுள்ள அணைகள் நேற்று (மே 5) மூடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளன. ரியாசி மற்றும் ராம்பன் மாவட்டங்களில் உள்ள சலால் மற்றும் பாக்லிஹார் நீர் மின் அணைகளின் அனைத்து மதகுகளும் மூடப்பட்டன. அவற்றில் ஒரே ஒரு மதகு மட்டும் வனவிலங்குகள் நீர் அருந்த திறந்துவிடபட்டன.
கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் அணைகளை தூர்வாரும் பணிக்காக ஒரு பகுதியாக இந்த நீர்த்தேக்கங்கள் காலி செய்யப்பட்டன. என்றும், அதனால் தான் நீர் திறந்துவிடவில்லை என்றும் கூறப்படுகிறது. இதற்கு முன்னதாகவே, பாகிஸ்தானின் பஞ்சாபிற்கு நீர் ஓட்டத்தை கட்டுப்படுத்த பாக்லிஹார் அணையின் மதகுகளின் கதவுகள் குறைக்கப்பட்டுள்ளன என்று ஒரு மூத்த அதிகாரி ஒருவர் தனியார் செய்தி நிறுவனத்திற்கு கூறியுள்ளார். மேலும், சிந்து நதி கட்டமைப்பில் புதியதாக 6 அணைகள் கட்டுவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
பாகிஸ்தானின் சிந்து நதி அமைப்பு ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் முகமது காலித் இத்ரீஸ் ராணா ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், இந்தியா பாகிஸ்தானுக்கு அனுப்பும் வழக்கமான நீரின் அளவை கிட்டத்தட்ட 90% குறைத்துள்ளதாக அவர் கூறினார். நீர் ஓட்டம் கட்டுப்படுத்தப்பட்டால் பாகிஸ்தான் விவசாய நிலங்களுக்கான நீர் விநியோகத்தை 5-ல் ஒரு பங்கு குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்றும் அவர் கூறினார்.