சென்னை: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான வேட்புமனு திரும்பப் பெறும் கால அவகாசம் இன்று (ஏப்ரல் 9) பிற்பகல் 3 மணியுடன் நிறைவடைந்தது.234 தொகுதிகளுக்கும் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட பிறகு, இன்று மாலையில் தேர்தல் அதிகாரிகள் இறுதி வேட்பாளர் பட்டியலை வெளியிட உள்ளனர். இதைத் தொடர்ந்து, வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.
இந்தத் தேர்தலில் மொத்தம் 7,599 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதில் 2,467 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. சுமார் 159 வேட்புமனுக்கள் வாபஸ் பெறப்பட்டுள்ளன.தொகுதி வாரியாக பார்க்கும்போது, அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 89 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மிகக் குறைவான வேட்பாளர்கள் உள்ள தொகுதிகளாக அம்பாசமுத்திரம், கூடலூர் மற்றும் உதகை ஆகிய மூன்று தொகுதிகளில் தலா 6 வேட்பாளர்கள் மட்டுமே உள்ளனர்.
வேட்புமனு திரும்பப் பெறும் கால அவகாசம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, மாலை நேரத்தில் ஒவ்வொரு தொகுதிக்கும் இறுதி வேட்பாளர் பட்டியல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும். இந்தப் பட்டியலில் இடம்பெற்ற வேட்பாளர்களுக்கு மட்டுமே தேர்தல் சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.
தமிழ்நாடு சட்டமன்றத்தின் 234 உறுப்பினர்களையும் தேர்ந்தெடுப்பதற்கான பொதுத் தேர்தல் ஏப்ரல் 23, 2026 அன்று ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் மே 4, 2026 அன்று அறிவிக்கப்படும்.இந்தத் தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் இடையே கடும் போட்டி எதிர்பார்க்கப்படும் நிலையில், இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
