விஜய் பரப்புரை செய்ய 51 நிபந்தனைகள் - செங்கோட்டையன் தகவல்!

நெல்லையில் நாளை தவெக தலைவர் விஜய் பரப்புரைக்கு 51 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

Hero Image

நெல்லை : தமிழக வெற்றி கழகம் (தவெக) சார்பில் 2026 சட்டமன்றத் தேர்தல் பரப்புரை தீவிரமடைந்துள்ள நிலையில், தவெக மாநில நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் இன்று திருநெல்வேலியில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.நெல்லை மாவட்டத்தில் தவெக தலைவர் விஜய் பரப்புரை செய்வதற்கு தேர்தல் ஆணையம் 51 நிபந்தனைகள் விதித்துள்ளதாக செங்கோட்டையன் தெரிவித்தார். இருப்பினும், அனைத்து நிபந்தனைகளுக்கும் உட்பட்டு பொதுக்கூட்டம் நடத்தப்படும் என்று அவர் உறுதியளித்தார்.

விஜய்யின் பரப்புரைக்கு மட்டும் கடுமையான விதிமுறைகள் விதிக்கப்படுவதாகவும், சென்னையைத் தவிர மற்ற இடங்களில் பெரிய அளவில் பிரச்சினை இல்லை என்றும் செங்கோட்டையன் குற்றம் சாட்டினார். “பொதுவாக எல்லா நிகழ்ச்சிகளும் சரியாக நடைபெற்று வருகின்றன. சென்னையில் மட்டும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், விஜயால் பல இடங்களுக்கு சென்று பரப்புரை செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தின் பிற பகுதிகளில் உள்ள விதிமுறைகளுக்கு உட்பட்டு நாங்கள் பணியாற்றி வருகிறோம்” என்று அவர் கூறினார்.

திருநெல்வேலியைத் தொடர்ந்து விஜய் எங்கெல்லாம் பரப்புரை செய்ய உள்ளார் என்ற கேள்விக்கு பதிலளித்த செங்கோட்டையன், “தூத்துக்குடி செல்கிறார். அதன் பிறகு தலைவருடன் (விஜய்) கலந்தாலோசித்து, அவர் சொல்லும் முடிவுக்கு ஏற்ப அடுத்தகட்ட பணிகளை மேற்கொள்வோம்” என்று தெரிவித்தார்.

மக்களின் ஆதரவு குறித்து பேசிய செங்கோட்டையன், “என் தொகுதியில் மக்கள் நல்ல தீர்ப்பை வழங்குவார்கள். தலைவர் விஜய்யின் பெயரால் 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளது. இளைஞர்கள், இளம் பெண்கள், குழந்தைகள், பெரியவர்கள், முதியவர்கள் என அனைத்து தரப்பினரும் புதிய மாற்றத்தை விரும்புகிறார்கள். அவருடைய உச்சகட்ட திரைப்பட வாழ்க்கையை விட்டுவிட்டு அவர் அரசியலுக்கு வந்திருக்கிறார். அப்படிப்பட்ட ஒருவர் நாட்டை ஆள வேண்டும் என்பதுதான் மக்களின் ஆசை. அந்தக் கனவு நிச்சயம் நனவாகும்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.