மத மோதல்களை தூண்டும் பேச்சு? மதுரை ஆதீனம் மீது போலீசில் பரபரப்பு புகார்!
மதுரை ஆதீனம் பொய் தகவலையும், மத மோதலை தூண்டும் விதமாக பேசியுள்ளார் என அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரை காவல் ஆணையரகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மதுரை : சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் சைவ சித்தாந்த மாநாடு நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள மதுரை ஆதீனம் சாலை மார்க்கமாக மே 2ஆம் தேதி மதுரையில் இருந்து சென்னைக்கு வந்தார்.
அப்போது, விழுப்புரம் ரவுண்டானா அருகே சென்ற போது இவர் வாகனம் சிறிய விபத்துக்குள்ளானது. இதில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இதனை தொடர்ந்து மே 3ஆம் தேதி நடைபெற்ற மாநாட்டில் பேசுகையில் “என்னை கொலை செய்ய சதி செய்துவிட்டார்கள். இதில் பாகிஸ்தான் ஈடுபட்டு இருக்கலாம். தருமை ஆதினத்தின் ஆசியால் நான் காப்பாற்றப்பட்டுள்ளேன். மீனாட்சி சுந்தரேஸ்வரர் தான் என்னை காப்பாற்றினார். ஒரு நல்ல காரியத்தை இப்போது எங்கும் பேச முடிவதில்லை” என பேசினார்.
அதன் பிறகு கள்ளக்குறிச்சி போக்குவரத்து காவல் துறை விபத்து நடந்த சிசிடிவி காட்சிகளை வெளியிட்டு அதில் மதுரை ஆதீனம் சென்ற வாகனத்தை ஒட்டிய ஓட்டுநர் மீது தான் தவறு என சுட்டிக்காட்டினர். மேலும், மறுபுறம் காரில் வந்த கள்ளக்குறிச்சியை சேர்ந்த ஓட்டுநர், மதுரை ஆதீனம் சென்ற கார் அதிவேகத்தில் விபத்து ஏற்படுத்தும் வகையில் சென்றதாக அளித்த புகாரின் பெயரில் மதுரை ஆதீனம் கார் ஓட்டுநர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவும் செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து மதுரை காவல் ஆணையரிடத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில், மதுரை ஆதீனம் சென்ற கார் தான் அதிவேகத்தில் சென்றது என்பது சிசிடிவி காட்சிகளில் தெரியவந்துள்ளது என்றும், ஆனால் மதுரை ஆதீனம் மத மோதல்களை தூண்டும் வகையில் தவறான தகவல்களை பரப்பி வருகிறார் என்றும், இவரை இதுபோன்று பேச வைத்ததன் பின்னணியில் யார் யார் உள்ளனர் என்றும் விசாரணை செய்ய வேண்டும் என புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.