காவேரியில் இருந்து கர்நாடக அரசு தமிழகத்திற்கு தரவேண்டிய தண்ணீரை பெற தமிழக அரசு தொடர்ந்து முயற்சித்து, காவேரி மேலாண்மை வாரியம், காவேரி ஒழுங்கற்று வாரியம் வரை சென்று, கடந்த 13ஆம் தேதி காவிரி மேலாண்மை வாரியம் 15 நாட்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்க வேண்டும் என கர்நாடகாவுக்கு அறிவுறுத்தியது.
இதனை தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் காவிரி விவகாரம் தொடர்பாக பதியப்பட்ட வழக்கு விசாரணையிலும் காவேரி மேலாண்மை வாரியம் கூறிய உத்தரவை உறுதிப்படுத்தியது. தீர்ப்பின்படி, முதலில் 2500 கனஅடி, அடுத்து 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் என தற்போது உரிய தண்ணீரை கர்நாடக அரசு திறந்து வருகிறது.
காவேரி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து இன்று கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக கர்நாடகாவுக்கு செல்லும் லாரிகள் இன்று செல்ல வேண்டாம் என லாரிகள் உரிமையாளர் சங்கம் அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், இது குறித்து இன்று சென்னை கோட்டூர்புரத்தில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அமைச்சர் துரைமுருகன், கர்நாடக மாநிலத்தில் பந்த் நடைபெறுவது பற்றி நான் கருத்து கூறவிரும்பவில்லை. அதே நேரத்தில் உச்சநீதிமன்றம் கூறுவது தான் கடைசி தீர்ப்பு. அப்படிப்பட்ட உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து போராட்டம், பேரணி நடத்துவது தவறு.
அது உச்சநீதிமன்ற தனித்தன்மையை கேள்விக்குறியாக்கும். இதனை புரிந்து கொண்டு நடக்க வேண்டும். அதே போல உச்சநீதிமன்றமும் தங்கள் கருத்துக்கு வீதியில் எதிர்ப்பு வந்தால் அதனை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கடந்த 13.09.2023இல் காவேரி மேலாண்மை வாரியம் தொடர்ந்து 15 நாட்களுக்கு 5000 கனஅடி நீர் திறக்க வேண்டும் என கூறியிருந்தது.
அதனை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. இடையில் கர்நாடக அரசு தரவேண்டிய தண்ணீரை , 2500, 3000 என ஆரம்பித்து இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 7000கனஅடி நீர் வந்து கொண்டு இருக்கிறது. நமக்கு வரவேண்டிய 11000 கனஅடி நீர் நாளைக்குள் வந்துவிடும் என எதிர்பார்க்கிறேன் என்று அமைச்சர் துரைமுருகன் கூறியிருந்தார்.
