ஆவின் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்வு..முதல்வர் கொடுத்த குட் நியூஸ்!

ஆவின் பால் கூட்டுறவு சங்கங்களில் கொள்முதல் விலை ரூ.3 உயர்வு என சட்ட பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.

Hero Image

சென்னை : தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று வழக்கம்போல் கூடியது. இன்றைய கூட்டத்தில் நீர்வளம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி, மற்றும் சுற்றுலா ஆகிய முக்கியத் துறை சார்ந்த மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் தங்களது கருத்துக்களை எடுத்துரைத்த பிறகு, சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களான புஸ்ஸி ஆனந்த மற்றும் ராஜேஷ்குமார் ஆகியோர் விவாதத்திற்குப் பதிலளித்து புதிய துறை சார்ந்த அறிவிப்புகளை வெளியிட உள்ளனர்.

இந்நிலையில், சட்டப்பேரவை இன்று கூடியதும், பேரவை விதி 110-ன் கீழ் தமிழக முதலமைச்சர் விஜய் பால் உற்பத்தியாளர்களின் நலனைக் காக்கும் வகையில் மிகமுக்கியமான அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

அறிவிப்பை வெளியிட்டு உரையாற்றிய முதலமைச்சர், "உற்பத்தி செய்யும் பாலை தனது சந்ததிகளுக்கு மட்டுமின்றி, மனிதர்கள் உள்ளிட்ட பிற ஜீவராசிகளுக்கும் வழங்கி உயிரைக் காக்கும் பசுவை தெய்வமாகப் போற்றி வளர்த்து வருவது நமது பாரம்பரியத்தின் சிறப்பு. இன்றைய அறிவியல் உலகில் ஒரு லிட்டர் பாலை உற்பத்தி செய்வதற்காகப் பசுவின் உடலில் சுமார் ஐநூறு லிட்டர் இரத்தம் சுத்திகரிக்கப்படுவதாகக் கூறப்படும்போது, பசுவின் உழைப்பை எண்ணி வியக்கத் தோன்றுகிறது" என்று பசுக்களின் முக்கியத்துவத்தைக் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாட்டில் உள்ள 8,800 பால் கூட்டுறவு சங்கங்களில் அங்கம் வகிக்கும் 3,16,000 பால் உற்பத்தியாளர்களிடமிருந்து தினசரி 34 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு, ஆவின் நிறுவனம் மூலம் நாள் ஒன்றுக்கு 31 லட்சம் லிட்டர் பால் நுகர்வோருக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

தற்போது 4.3 சதவீதம் கொழுப்புச்சத்து மற்றும் 8.2 சதவீதம் இதர சத்துக்கள் அடங்கிய ஒரு லிட்டர் பாலுக்கு, கூட்டுறவு சங்கம் மூலமாக கொள்முதல் விலையாக ரூ. 35-ம், மாநில அரசு ஊக்கத்தொகையாக ரூ. 3-ம் என மொத்தம் ரூ. 38 வழங்கப்பட்டு வந்தது. இந்த விலை கடந்த 2022-ஆம் ஆண்டு நவம்பர் 5-ஆம் தேதி முதல் நடைமுறையில் இருந்தது.

அதிகாலை 3 மணிக்கே எழுந்து மாடுகளைச் சுத்தம் செய்து பால் உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்களின் உழைப்பையும், தீவனம் மற்றும் வேலையாட்களின் கூலி உள்ளிட்ட அதிகரித்து வரும் செலவுகளையும் கடந்த கால அரசுகள் போதிய அளவில் கருத்தில் கொள்ளவில்லை என்றும், அவர்களுக்கு உரிய விலையை உயர்த்த வேண்டும் என்ற எண்ணம் அப்போதைய அரசுகளுக்கு இல்லை என்றும் முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அரசு தற்போது சந்தித்து வரும் கடுமையான நிதி நெருக்கடியிலும், பால் உற்பத்தியாளர்களின் உழைப்புக்கும் வாழ்வாதாரத்திற்கும் உரிய மதிப்பை வழங்க வேண்டியது அரசின் கடமை எனக் கருதி, ஆவின் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ. 3 உயர்த்தி மொத்தம் ரூ. 41-ஆக உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது.

இதன் கீழ், கூட்டுறவு சங்கம் மூலமாக வழங்கப்படும் கொள்முதல் விலை ரூ. 1 உயர்த்தப்படுவதோடு, அரசு வழங்கும் ஊக்கத்தொகை ரூ. 3-ல் இருந்து ரூ. 5 ஆக உயர்த்தப்படுகிறது. இதன் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள 3 லட்சத்து 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள் நேரடியாகப் பயனடைவார்கள்.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கொள்முதல் விலை உயர்வினால், தமிழக அரசுக்குக் கூடுதல் செலவினமாக மாதந்தோறும் ரூ. 30 கோடியும், ஆண்டு ஒன்றுக்கு ரூ. 360 கோடியும் நிதிச் சுமை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆவின் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்வு..முதல்வர் கொடுத்த குட் நியூஸ்!