சென்னை : தவெக அரசுக்கு ஆதரவாக 25 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்த நிலையில், அதிமுகவில் 22 எம்.எல்.ஏ.க்கள் எதிராக வாக்களித்த சம்பவம் கட்சிக்குள் கருத்து வேறுபாடு இருப்பதை வெளிச்சமிட்டுள்ளது. இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தனது பேட்டியில் இபிஎஸ் குறித்து சில விஷயங்களை பேசியுள்ளார்.
சி.வி.சண்முகம் பேசுகையில், “ஆளும் கட்சியோடு ஆதரவாக வாக்களித்திருக்கிறார் என்று யாருக்கு பதவி ஆசை? யாருக்கு என்பதை அவர் மனசாட்சியைத் தொட்டுச் சொல்ல வேண்டும். உங்களுக்கும் பிள்ளை இருக்கிறது, எனக்கும் பிள்ளை இருக்கிறான். என் பிள்ளை மீது தலை மீது சத்தியம் செய்து சொல்கிறேன்.
திமுகவோடு உங்களுக்கு உறவும் இல்லை என்று சொன்னவர்கள் இப்போது அவர்களிடமிருந்து ஆதரவு பெறுகிறார்கள்” என்று குறிப்பிட்டார். மேலும் அவர், “4 தேர்தல் முடிந்து வெற்றிச் சான்றிதழ் வாங்கிய உடன் சென்னைக்கு வந்துகொண்டிருந்தபோது, திமுகவைச் சேர்ந்த இரண்டு முன்னாள் அமைச்சர்கள் தொடர்புகொண்டு பேசினார்கள். அவர்கள் ‘நல்ல பதவி வாங்கிக்கொள்ளுங்கள்’ என்று சொன்னார்கள்.
இரவில் வந்த பிறகுதான் முழு விஷயமும் புரிந்தது. திமுக ஆட்சியில் பங்கு இல்லை, வெளியிலிருந்து ஆதரவு தருகிறார்கள் என்று சொன்னார்கள். ஒரு இருபத்தைந்து அமைச்சர்கள் கிடைக்கும் என்றும் கூறினார்கள்” என்று விவரித்தார்.
அதிமுகவின் அடிப்படை கொள்கையை சுட்டிக்காட்டிய சண்முகம், “இந்த இயக்கம் திமுகவை எதிர்த்து, திமுக ஒரு தீய சக்தி என்று சொல்லி புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களால் தொடங்கப்பட்ட இயக்கம். அத்தகைய இயக்கத்தின் தொண்டர்கள் இப்போது திமுகவிடமிருந்து ஆதரவு பெற்று ஆட்சியை நடத்த உதவுகிறார்கள்” என்று வேதனை தெரிவித்தார்.
விசிக தலைவர் திருமாவளவனை முதலமைச்சர் ஆக்குகிறோம் என்ற நிலைப்பாட்டை திமுக எடுத்தது. திருமாவளவன் முதல்வர், மற்ற 33 அமைச்சர்களும் அதிமுகவினர் என்று முடிவு செய்யப்பட்டது. அதற்கு எடப்பாடி பழனிசாமி நான்தான் முதலமைச்சராக இருப்பேன். இல்லையென்றால் எதிர்க்கட்சியாக செயல்படுகிறோம் என்று சொன்னார். இதுதான் கடைசியில் நடந்தது எனவும் சிவி சண்முகம் தெரிவித்துள்ளார்.
தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், விசிக, ஐயூஎம்எல் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. நம்பிக்கை வாக்கெடுப்பில் 144 வாக்குகள் பெற்று பெரும்பான்மையை நிரூபித்துள்ளது.
