அமர்நாத் புனித யாத்திரை சென்று அங்கு ஏற்பட்ட பனிச்சரிவால் சிக்கிக்கொண்ட, தமிழ்நாட்டைச் சேர்ந்த 17 பேர் தமிழ்நாடு அரசின் முயற்சியால் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அமர்நாத் கோவிலுக்கு புனித யாத்திரை சென்ற தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 17 நபர்கள். தமிழ்நாடு திரும்பும் போது சங்கர், முருகானந்தம், செல்லபாண்டி, செல்வி,சாவித்திரி, சந்திரசேகரன், கலைவாணி, சொர்ணலதா, கண்ணன், அமுதா, ராகினி ராஜேஸ்குமார் ஆகியோர் அமர்நாத் அருகே ஏற்பட்ட பனிச்சரிவு காரணமாக, ஸ்ரீநகருக்கான பாதை முற்றிலும் சேதமடைந்து அந்த பாதையிலே சிக்கி கொண்டார்கள்.
இதனையடுத்து, இந்த தகவல் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், உடனடியாக அவர்களை மீட்க வேண்டும் என ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில், அங்கு சிக்கி கொண்ட நபர்கள் உடனடியாக தொடர்பு கொள்ளப்பட்டு. பாதுகாப்பாக மீட்கப்பட்டு 13.07.2023 அன்று புதுடெல்லியில் இருக்கும் தமிழ்நாடு இல்லத்திற்கு அழைத்து தங்கவைக்கப்பட்டனர்.
மேலும், சிக்கி கொண்ட 17 நபர்களும், தமிழ்நாடு அரசின் மூலம் பயணச்சீட்டுகள் பெற்றுத்தரப்பட்டு (15.07.2023) ரயில் மூலம் சென்னை சென்ட்ரல் இரயில் நிலையம் வந்தடைந்தனர். பிறகு, அவர்களை தமிழ்நாடு அரசின் சார்பாக மாண்புமிகு வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே. எஸ். மஸ்தான் மற்றும் அரசு அலுவலர்கள் வரவேற்று அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைத்தனர்.
