சென்னை : தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகியுள்ளார். அண்ணாமலை அளித்த ராஜினாமா கடிதத்தை பாஜக தேசிய தலைமை ஏற்றுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதன் மூலம் பாஜகவுடனான அவரது நீண்டகால அரசியல் பயணத்தில் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.
கடந்த சில வாரங்களாக அண்ணாமலையின் அடுத்தகட்ட அரசியல் நிலைப்பாடு குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தன. குறிப்பாக, தனிக்கட்சி தொடங்குவது தொடர்பாகவும், புதிய அரசியல் பாதையை தேர்வு செய்ய உள்ளதாகவும் செய்திகள் பரவியிருந்தன.இந்த நிலையில், பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தே விலகியிருப்பதாக வெளியாகியுள்ள தகவல் தமிழக அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், தனது அடுத்த அரசியல் பயணம் குறித்த முக்கிய அறிவிப்பை இன்று நண்பகல் 12 மணிக்கு வெளியிட உள்ளதாகவும் அண்ணாமலை அறிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் புதிய அரசியல் கட்சி தொடங்குகிறாரா, புதிய கூட்டணியை உருவாக்குகிறாரா அல்லது வேறு அரசியல் முடிவை அறிவிக்கிறாரா என்பது குறித்து அரசியல் கட்சிகளும், அவரது ஆதரவாளர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
தமிழக பாஜகவின் வளர்ச்சியில் முக்கிய முகமாக இருந்த அண்ணாமலையின் இந்த முடிவு, மாநில அரசியலில் புதிய மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும் என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அண்ணாமலையின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்குப் பிறகே அவரது அடுத்த அரசியல் நகர்வு குறித்து முழுமையான தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
