சென்னை : பாஜகவில் இருந்து விலகி புதிய அரசியல் பயணத்தை தொடங்கியுள்ள அண்ணாமலை, தனது புதிய மக்கள் இயக்கத்திற்கான இணைய தளத்தை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளார்.
இன்று காலை சமூக வலைதள பக்கங்களில் நேரலையில் வந்த அண்ணாமலை பாஜகவில் இருந்து தான் விலகியது குறித்தும், புதிய கட்சி ஆரம்பிப்பதாகவும் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தார். அதே போல, www.wetheleader.org என்ற இணையதளத்தை வெளியிட்ட அண்ணாமலை, புதிய அரசியல் மாற்றத்தை விரும்பும் மக்கள் இந்த இயக்கத்தில் இணைந்து பயணிக்கலாம் என அழைப்பு விடுத்திருந்தார்.
இந்த நிலையில், இணையதளம் அறிமுகமான சில மணி நேரங்களிலேயே மக்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, இணையதளம் தொடங்கப்பட்டு வெறும் மூன்றரை மணி நேரத்தில் 5 லட்சத்திற்கும் அதிகமானோர் தங்களது ஆதரவை பதிவு செய்து இயக்கத்தில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.
தமிழக அரசியலில் புதிய மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த அரசியல் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளதாக அண்ணாமலை தனது அறிமுக உரையில் தெரிவித்திருந்தார். மேலும், தற்போதைய அரசியல் கட்டமைப்பை மாற்றும் வகையில் புதிய சிந்தனை மற்றும் புதிய தலைமுறைக்கான அரசியல் தளமாக இந்த இயக்கம் அமையும் என்றும் அவர் கூறியுள்ளார்.
பாஜகவில் இருந்து விலகிய உடனேயே தனி அரசியல் பாதையை தேர்வு செய்துள்ள அண்ணாமலைக்கு, இளைஞர்கள் மற்றும் சமூக வலைதள பயனர்கள் மத்தியில் அதிக ஆதரவு கிடைத்து வருவதாகவும் அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
